தூக்கி எறியும் குப்பைக்கு ஸ்நாக்ஸ் கிடைக்கும்! போபால் மாநகராட்சியின் சூப்பரான ஐடியாவை பார்த்தீங்களா?
நாம் தூக்கி எறியும் குப்பைகளை வைத்து ஒரு கஃபேவில் சாப்பிட முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? மத்தியப் பிரதேசத்தில் அப்படி ஒரு ஹோட்டல் இயங்கி வருகிறது. உங்கள் வீட்டில் கிடக்கும் பழைய சார்ஜர்கள், கார்ட்போர்ட் பாக்ஸ்கள் மற்றும் தேவையில்லாத எலக்ட்ரானிக் பொருட்களைக் கொடுத்தாலே போதும்.. காலை டிபனை பணமில்லாமல் சாப்பிட முடியும்.
மத்திய பிரதேசத்தின் போபால் மாநகராட்சி, 10-ஆம் நம்பர் மார்க்கெட் அருகில் கச்சரா கஃபே என்ற வித்தியாசமான உணவகத்தைத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீட்டில் வைத்திருக்கும் பழைய பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் எந்தெந்த பொருட்களை எல்லாம் ரீசைக்கிள் செய்ய முடியுமோ அந்தந்த பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு இந்த கஃபே-வுக்கு செல்லலாம்.

அங்குள்ள ஊழியர்களிடம் அவற்றை வழங்கினால்.. பொருட்களை எடை போட்டு எடுத்துக்கொண்டு அதற்குரிய பாயிண்ட்டுகளை உடனே கொண்டு வருபவரின் போனுக்கு அனுப்பி விடுவார்கள். இதை கச்சரா கரன்சி என்று கூறுகின்றனர். அந்த ரிவார்டு பாயிண்டுகளை பயன்படுத்தி பலகாரங்கள், உணவு அல்லது பிற கைவினைப் பொருட்கள் என எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
எந்தெந்த பொருட்களை வழங்கலாம்?: பிளாஸ்டிக் வேஸ்ட், பால் பாக்கெட் கவர்கள், பழைய மொபைல் போன்கள், சார்ஜர்கள், துணி, செய்தித்தாள்கள், கார்ட்போர்ட் பாக்ஸ் என நீங்கள் தூக்கி எறியும் பொருட்களை எல்லாம் இங்கு வாங்கிக் கொள்கின்றனர். அதற்காக ஒரு டேக் லைனையும் பயன்படுத்துகின்றனர். “Turn Your Trash Into Treats” என்ற வாசகத்துடன் இந்த கடையை தொடங்கியுள்ளனர்.
போபாலில் சில காலமாகவே ரீசைக்கிளிங் செய்ய முடியாத அளவுக்கு பிளாஸ்டிக் மற்றும் இதர பொருட்களை மக்கள் தூக்கி எறிந்தனர். இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே குப்பைகளை பிரித்து கொடுப்பதற்காகவும், வேஸ்ட் மேனேஜ்மென்ட்டை இன்னும் எளிதாக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இன்றைய சூழலில் பெரும்பாலான நகரங்களில் இந்த பிரச்சனை இருக்கிறது. பொதுமக்கள் சிலர் குப்பைகளை ரோட்டில் அப்படியே வீசி விடுகின்றனர். இதை சுத்தம் செய்ய வரும் தூய்மை பணியாளர்களுக்கு இதுவே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இது போன்ற நல்ல யோசனையை பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தினால் சுற்றுப்புறம் தூய்மையாக இருப்பதோடு, தூய்மை பணியாளர்களுக்கும் சிரமம் குறையும்.

