
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பொது விசை உள்கட்டமைப்பு ((PKI): PKI) பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கான புதிய நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான விலை மனு கோரல் விரைவில் கோரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
முன்னைய கொள்முதல் நடைமுறையில் காணப்பட்ட சில குறைபாடுகள் காரணமாகவே அது இரத்து செய்யப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே 4 மின்-வாயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்-கடவுச்சீட்டு அறிமுகத்திற்கு அமைய, அடுத்த ஒரு வருடத்திற்குள் மேலும் 12 மின்-வாயில்களைப் பொருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டில் பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதனால் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், இலங்கை கடவுச்சீட்டு சர்வதேச தரத்திற்கு அமையவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

