எந்தவோர் இணைப்பையும் திறக்கும் முன் அல்லது அதற்குப் பதிலளிக்கும் முன், இணையதள முகவரியின் உண்மைத்தன்மையையும் அனுப்புநரின் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போலி போக்குவரத்து விதிமீறல் செய்திகள் மற்றும் இணையவழி மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு, இலங்கை பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் வேகக்கட்டுப்பாட்டை மீறியது தொடர்பான உத்தியோகபூர்வ பொலிஸ் அறிவிப்புகள் போல, பொதுமக்களின் தகவல்களைத் திருடும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரியவந்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவின் பரிமாற்றுப் பிரிவுக்கு சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் ஊடாக இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுவது குறித்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
SMS, மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகச் செயலிகள் மூலம் அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் எந்தவொரு இணைப்பையும் (Links) கிளிக் செய்ய வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், எந்தவோர் இணைப்பையும் திறக்கும் முன் அல்லது அதற்குப் பதிலளிக்கும் முன், இணையதள முகவரியின் உண்மைத்தன்மையையும் அனுப்புநரின் அடையாளத்தையும் சரிபார்க்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வங்கி கணக்கு விவரங்கள், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), PIN இலக்கங்கள் அல்லது கடவுச்சொற்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைச் சரிபார்க்கப்படாத இணைப்புகள் அல்லது அறிமுகமில்லாத இணையதளங்களில் ஒருபோதும் பகிர வேண்டாம்.
தகவல்களை உறுதிப்படுத்த இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ தொடர்பு ஊடகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரச இணையதளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உடனடியாகப் பணம் செலுத்தக் கோரும் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தும் செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
மேலும், சந்தேகத்துக்கிடமான செய்திகள் மற்றும் மோசடியான இணையதளங்கள் குறித்து உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்குமாறும், சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை அவ்வப்போது புதுப்பித்து (Update) வைத்துக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் சைபர் குற்றங்களுக்கு பலியாவதைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும் தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைப் பாதுகாக்க முடியும் என்றும் இலங்கை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

