Business
oi-Vigneshkumar
டெல்லி: யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குத் தனியாக கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். இந்த கட்டணம் பொதுமக்களிடம் வசூலிக்கப்படாது என்றும் வணிகர்களிடம் இருந்து மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்போது நாடு முழுக்க மிகவும் பிரபலமான டிஜிட்டல் பரிவர்த்தனையாக யுபிஐ இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் யுபிஐ மூலமாகவே நடக்கிறது. இதுநாள் வரை யுபிஐ பரிவர்த்தனைகள் முழுமையாக இலவசமாகவே இருந்தது. பொதுமக்கள் அல்லது வணிகர்கள் யாருமே ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த தேவையில்லை. யுபிஐ இந்தளவுக்கு வெற்றிகரமாக இருக்க இதுவே முக்கிய காரணமாக இருந்தது.

யுபிஐக்கு தனி கட்டணம்
இந்தச் சூழலில் தான் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் சேவை கட்டணத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் என்பதே அதன் சாரம்சம்.! இதை கடுமையாக சாடிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த சுமை இறுதியில் சாதாரண மக்களையே சென்றடையும் என்று விமர்சித்திருந்தார்.
நிர்மலா சீதாராமன் விளக்கம்
இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஆதாரமற்ற தகவல்களை பரப்புவதற்கு முன்பு இதை கவனியுங்கள். MDR என்பது வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும். வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார். மேலும், MDR மூலம் கிடைக்கும் வருவாய் வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான உள்கட்டமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளில் அதிக அளவில் முதலீடு செய்ய உதவும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
யாருக்கெல்லாம் பொருந்தும்
அவர் மேலும், “இதன் மூலம் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் பலனை யுபிஐ சேவையை பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் பெறுவார்கள்.. வங்கிகள் மற்றும் யுபிஐ நிறுவனங்கள் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பில் முதலீடு செய்ய இது உதவும். மேலும், யுபிஐ-க்கு எம்டிஆர் விதிப்பது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. என்பிசிஐ தலைமையிலான யுபிஐ கமிட்டி தான் இந்த சேவை கட்டணம் தொடர்பான முடிவை எடுக்க உள்ளது. ஆனால், இதற்கான நடவடிக்கை நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகே நடைபெறும்” என்றார்.
அதாவது தற்போது கொண்டு வரப்பட்டுள்ள மசோதா யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணத்தை நேரடியாக விதிக்கவில்லை. மாறாக, எந்தெந்த பரிவர்த்தனைகள் இலவசமாக தொடர வேண்டும்.. எதற்கு கட்டணம் விதிக்கலாம் என்பதை தீர்மானிக்க சட்டப்பூர்வ அடித்தளத்தை உருவாக்குகிறது.
காங்கிரஸ் தாக்கு
யுபிஐ சேவை கட்டணத்தின் சுமை சாதாரண மக்களிடம் செல்லும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த நிர்மலா சீதாராமன், “இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த மசோதா யுபிஐ மற்றும் ரூபே கார்டு பரிவர்த்தனைகளுக்கான தற்போதைய நடைமுறையில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசுக்கு சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கும். அதாவது வரும் காலத்தில் மத்திய அரசு விரும்பினால் கட்டணத்தை விதிக்கலாம். அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எவ்வளவு கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பது குறிப்பிடப்படவில்லை.




