ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநிலத்தில் போதைப்பொருள் கலக்கப்பட்ட ‘வேப்’ (Vape) திரவங்களைத் தயாரித்து விநியோகித்து வந்த பெரும் கும்பலை முறியடித்த காவல் துறை, RM10.68 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் 7 பேரைக் கைது செய்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 5 அதிவிரைவு சோதனைகளின் போது 36 முதல் 46 வயதுடைய 6 ஆண்களும் ஒரு பெண்ணும் (ஒரு வெளிநாட்டு ஆடவர் மற்றும் ஒரு வெளிநாட்டுப் பெண் உட்பட) கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநிலத காவல் துறை துணைத் தலைவர் ஹூ சுவான் ஹுவாட் அறிவித்தார்.
காரில் கடத்தப்பட்ட RM4.12 மில்லியன் மதிப்பிலான, ‘மெத்தம்பெட்டமைன்’ திரவம் நிரப்பப்பட்ட 9,000 வேப் கார்ட்ரிட்ஜ்கள் (82.40 கிலோ) பறிமுதல் செய்யப்பட்டன. மலேசிய ஆடவரும் வெளிநாட்டுப் பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
பண்டார் மெதினி, இஸ்கந்தர் புத்ரி (இரண்டாவது சோதனை): போதைப்பொருள் சேமிப்பு மற்றும் வேப் கார்ட்ரிட்ஜ்களில் திரவம் நிரப்பும் கூடமாகப் பயன்படுத்தப்பட்ட ஆடம்பரக் குடியிருப்பு (Condominium) சோதனையிடப்பட்டது. அங்கிருந்து RM6.37 மில்லியன் மதிப்பிலான 127.55 லிட்டர் மெத்தம்பெட்டமைன் திரவம், கொகேன், கெட்டமைன் மற்றும் வேப் நிரப்பும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டன.
தாமான் சுதேரா உத்தாமாவில் ஹெரோயின், எக்ஸ்டஸி மற்றும் எரிமின்-5 மாத்திரைகளுடன் மற்றொரு உள்ளூர் ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, முத்தியாரா ரினி & தஞ்சோங் அகாஸ், மூவார் (4 & 5-ஆம் சோதனைகள்): எஞ்சிய 3 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மொத்தமாகச் சோதனைகளின் போது 210.43 கிலோ கிராம் எடைக்கொண்ட போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை சுமார் 6.5 லட்சம் போதைப்பொருள் அடிமைகளின் பயன்பாட்டிற்குச் சென்றிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இக்கும்பல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இயங்கி வந்ததாகவும், சொகுசுக் குடியிருப்பில் போதைப்பொருள் திரவத்தை வேப் கார்ட்ரிட்ஜ்களில் அடைத்து உள்ளூர் சந்தைக்கு விநியோகித்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் கடத்துபவர், அவரது மனைவி, சேமிப்பு கிடங்குப் பொறுப்பாளர், விநியோகிப்பாளர், முகவர் மற்றும் இந்தச் சட்டவிரோத கும்பலின் முக்கியப் சூத்திரதாரி வரை அனைவரும் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சோதனையில் இருவருக்குப் போதைப்பொருள் பயன்படுத்திய நேர்மறை முடிவுகள் வந்துள்ளன; நால்வர் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி உள்ளது. அனைத்துச் சந்தேக நபர்களும் 1952-ஆம் ஆண்டின் ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் ஆகஸ்ட் 9 வரை 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.



