ஈரானுடனான ஐந்து மாதகால போரின் போது அமெரிக்க இராணுவம் தனது நீண்ட தூர துல்லியத் தாக்குதல் ஏவுகணைகளில் பெரும்பகுதியைப் பயன்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் தகவல்களை அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளுக்கான அமெரிக்காவின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளன.
பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளில் Army Tactical Missile Systems (ATACMS) மற்றும் Precision Strike Missiles (PrSM) ஆகியவை முக்கியமானவையாகும்.
உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ஏவுகணைகள்
இவற்றில் பெரும்பாலான கையிருப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஏவுகணையின் பெறுமதி ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.

இந்த நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் பாதுகாப்பான தூரத்திலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை.
உக்ரைனுக்கும் வழங்கப்பட்ட ATACMS ஏவுகணைகள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளன.
PrSM ஏவுகணைகள் அதைவிட மேம்பட்ட புதிய தலைமுறை ஆயுதங்களாகக் கருதப்படுகின்றன.
ஏவுகணை கையிருப்பு குறைந்திருப்பது, ஈரானுக்கு எதிராக மீண்டும் பெரிய அளவிலான தாக்குதல்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதிக ஆபத்துள்ள விமானத் தாக்குதல்களை அமெரிக்கா அதிகம் நம்ப வேண்டிய நிலையை உருவாக்கக்கூடும் என பாதுகாப்பு வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு
மேலும், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளைத் தடுக்கும் அமெரிக்காவின் இராணுவத் திறனிலும் இதனால் தாக்கம் ஏற்படலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

எனினும், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உலகின் பல பகுதிகளில் உள்ள இராணுவக் கையிருப்புகளிலிருந்து ஆயுதங்களை மீள்நிரப்பி வருவதாக மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “உலகிலேயே அதிகளவு ஆயுதக் கையிருப்பு அமெரிக்காவிடம் உள்ளது; தேவையைவிட அதிகமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

