“நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் திங்கட்கிழமை பிற்பகல் முதல் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய அளவிலான தாக்குதல்களை இரத்து செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானுடன் ஒரு உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாக்குதல்களைத் தவிர்க்குமாறு, டிரம்பிடம் கோரிக்கை விடுத்தன.
ஹார்முஸ் நீரிணை மற்றும் அணுசக்தி விவகாரங்களில் உடன்பாடு ஏற்படக்கூடும் என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்தார்.
“நாங்கள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதலுக்குத் தயாராகவே இருக்கிறோம். ஆனால், நான் மக்களைக் கொல்ல விரும்பவில்லை” என்று ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் குறிப்பிட்டார்.
இருப்பினும், அமெரிக்காவிடம் தாக்குதலைத் தவிர்க்குமாறு தாங்கள் கோரிக்கை விடுத்ததாக டிரம்ப் கூறுவது முற்றிலும் “பொய்” என்று ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஓமான் நாட்டின் உதவியுடன் ஹார்முஸ் நீரிணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இறுதி முடிவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சகம், அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாங்கள் உண்மையானதாகவே கருதுவதாகவும், எதற்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

