முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டிலேயே அதிகளவு அஸ்வெசும பயனாளிகளைக் கொண்ட நோர்வூட் பிரதேச செயலகத்தில், பயனாளிகளுக்கான சுமார் 30 லட்சம் ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு பெண் அதிகாரிகளை, ஹட்டன் பொலிஸின் விசேட புலனாய்வுப் பிரிவினர் நேற்று (01) கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் மாவட்ட நீதிமன்றப் பதில் நீதவான் எஸ். பார்த்திபன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை ஓகஸ்ட் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும பிரிவின் பொறுப்பதிகாரி என்றும், மற்றொருவரும் அதே பிரிவில் பணியாற்றிய பெண் அதிகாரி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள், நண்பர்களின் கணக்குகளுக்கு பணம் மாற்றம்
முதற்கட்ட கணக்காய்வு அறிக்கையின்படி, 2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அஸ்வெசும பயனாளிகளுக்குச் செல்ல வேண்டிய நிதி, அதிகாரிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் அப்பணத்தைச் சந்தேகநபர்களான இரு பெண் அதிகாரிகளும் பெற்றுக்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நோர்வூட் பிரதேச செயலாளர் சமீர கம்லத் ஹற்றன் பொலிஸின் விசேட புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர்.
அநாமதேய கடிதம் அம்பலப்படுத்திய மோசடி
அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கவில்லை என பல பயனாளிகள் பாதிக்கப்பட்டதாக, நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோனுக்கு அனுப்பப்பட்ட அநாமதேய கடிதமே, இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, குறித்த இரு அதிகாரிகளும் வேறு பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நுவரெலியா மாவட்டச் செயலகம் மற்றும் நிதி அமைச்சின் கணக்காய்வு அதிகாரிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழு விசாரணை மேற்கொண்டபோது, நிதி மோசடி உறுதி செய்யப்பட்டது.
மேலும் 3 அதிகாரிகள் மீது நடவடிக்கை
சந்தேகநபர்கள் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடையதாகக் கருதப்படும் மேலும் மூன்று அதிகாரிகளின் பணியை இடைநிறுத்த நுவரெலியா மாவட்டச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்போது அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அஸ்வெசும பிரிவின் ஏனைய அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பயனாளிகளை அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டு
அஸ்வெசும பணம் கிடைக்கவில்லை என அலுவலகத்துக்கு வந்த பயனாளிகளிடம், “பணம் வந்திருந்தால் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கும்; மீண்டும் அலுவலகத்துக்கு வர வேண்டாம்” என்று கூறி அச்சுறுத்தியதாகவும் விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகங்களிலும் அஸ்வெசும மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளில் இதுபோன்ற மோசடிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதை கண்டறிய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

