Last Updated:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று ஒரே நாளில் 7 தங்கம் உட்பட 16 பதக்கங்கள். மொத்தம் 39 பதக்கங்களுடன் பட்டியலில் 4-ஆவது இடத்தில் இந்தியா.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நேற்று (ஆகஸ்ட் 1) ஒரே நாளில் 7 தங்கம் உட்பட 16 பதக்கங்களை குவித்து இந்திய வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகள் இன்றுடன் (ஆகஸ்ட் 2) நிறைவடைகின்றன. கடந்த ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இந்த விளையாட்டுத் தொடரின் இறுதி நாளான இன்று, இந்திய வீரர்கள் ஜூடோ, டிராக் சைக்கிளிங் மற்றும் பாரா டிராக் சைக்கிளிங் ஆகிய போட்டிகளில் களமிறங்குகிறார்கள்.
இதனிடையே நேற்று நடைபெற்ற மகளிருக்கான குத்துச்சண்டை 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியாவும், 70 கிலோ பிரிவில் அருந்ததியும் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
இதேபோன்று, குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனைகள் பிரியா, சாக்ஷி, பிரீத்தி ஆகியோரும் தங்கம் வென்று அசத்தினர். ஆடவருக்கான குத்துச்சண்டையில் 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்காலும், 60 கிலோ பிரிவில் சச்சினும் தங்கப் பதக்கம் வென்றனர்.
அதேநேரம், 90 கிலோ பிரிவில் நரேந்தரும், 55 கிலோ பிரிவில் ஜடுமணி சிங்கும் வெள்ளி வென்று அசத்தினர். மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவில் லவ்லினா வெள்ளி வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் குத்துச்சண்டை போட்டியில் இதுவரை இல்லாத அளவாக 7 தங்கம், 3 வெள்ளி என 10 பதக்கங்களை இந்தியா வென்றது. மொத்தம் 39 பதக்கங்களுடன் பட்டியலில் 4-ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.


