2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துகள் தொடர்பிலும் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில், மொத்தம் 3,811 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துகளை அரசுடமையாக்குவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியாட்சகருமான எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.
நேற்று (31) நடைபெற்ற “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டின் கீழ், இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்ட பெருமளவிலான சொத்துகள் தொடர்பாக விசாரணைகளும் சட்ட நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் 1,490 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும், 2025ஆம் ஆண்டில் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துகளும் அரசுடமையாக்கும் சட்ட நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, 2026ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 772 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோதச் சொத்துகள் தொடர்பிலும் தேவையான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டின் கீழ் கடந்த ஒன்பது மாதங்களில் போதைப்பொருள் தொடர்பாக 239,384 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர்களில் 995 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், 378 பேரின் சொத்துக்கள் தொடர்பாக தனிப்பட்ட விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 3,287 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவுகளும் பெறப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த தேசிய நடவடிக்கையின் மூலம் கடந்த ஒன்பது மாதங்களில் 2,253 கிலோ 834 கிராம் ஹெரோயின், 2,640 கிலோ 695 கிராம் ஐஸ் (மெத்தாம்பெட்டமின்) மற்றும் 293 கிலோ 732 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு 102,116 மில்லியன் ரூபாய் என பொலிஸ் தெரிவித்துள்ளது.


