இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் 26ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.வி.என்.பி. பிரேமரத்ன (நிலந்த பிரேமரத்ன) நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ பதவி நிலைப் பிரதானியாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் பிரேமரத்ன, லெப்டினன்ட் ஜெனரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, முப்படைகளின் தளபதியும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.
தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் லசந்த ரொட்ரிகோ இன்று (31) தனது பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
மாத்தறை புனித சேவியர்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான லெப்டினன்ட் ஜெனரல் பிரேமரத்ன, 1990ஆம் ஆண்டு பயிலுநர் கெடற் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்தார். 1992ஆம் ஆண்டு தியத்தலாவை இராணுவக் கல்வியற் கல்லூரியில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், இரண்டாம் தர லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டு, பின்னர் இலங்கை பீரங்கிப் படையணியில் பீரங்கி அதிகாரியாக சேவையைத் தொடங்கினார்.
அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்படை பட்டப்பின்படிப்புப் பாடசாலையில் பாதுகாப்புக் கல்வியில் முதுகலைப் பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கல்வியில் (M.Def.S.) முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
36 ஆண்டுகளுக்கும் மேலான இராணுவச் சேவைக் காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல்வேறு தொழில்முறை மற்றும் விசேட பயிற்சிகளைப் பெற்றுள்ள பிரேமரத்ன, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது வெளிப்படுத்திய வீரத்துக்காக ‘ரணசூர’ பதக்கத்தை இரு முறை பெற்றதுடன், சிறப்பான சேவைக்காக ‘உத்தம சேவா’ பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பல்வேறு முக்கியப் பிரிவுகளில் நீண்டகால அனுபவம் பெற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் பொறுப்பை ஏற்று நாளை (ஓகஸ்ட் 1) முதல் தனது புதிய கடமைகளை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கவுள்ளார்.

