Last Updated:
பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. பிரதமர் மோடி வரவேற்றார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மாநிலங்களவையிலும் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர மசோதாவை தாக்கல் செய்த நிலையில், ஏறத்தாழ 7 மணி நேரம் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. மசோதாவை எதிர்த்து பேசிய காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நீட் முறைகேடு விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர் மட்ட குழு விசாரிக்க வேண்டும் என்றார்.
மேலும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, மசோதா நிறைவேற்றப்பட்டதை வரவேற்று வீடியோ வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தேர்வு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் வினாத் தாள் கசிவு மாஃபியாக்களுக்கு கடும் தண்டனையும், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கவும் சட்டத் திருத்தம் உதவும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.. பிரதமர் மோடி வரவேற்பு!


