Last Updated:
கர்நாடகாவில் 7,000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று என்ற தகவல் தவறு என கர்நாடக எய்ட்ஸ் தடுப்பு சங்கம் மறுப்பு. 2004 முதல் 39,000 பேருக்கு மட்டுமே பாதிப்பு.
கர்நாடகாவில் கல்லூரி மாணவர்கள் 7,000 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என அம்மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கர்நாடகாவில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 7,000-க்கும் மேற்பட்டோருக்கு எச்.ஐ.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கர்நாடக எய்ட்ஸ் தடுப்பு சங்கத்தின் திட்ட இயக்குநர் பத்மா பசவந்தப்பா, எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மாணவர்கள், இல்லத்தரசிகள், குடும்ப உறுப்பினர்கள் என தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்துத் தரவுகளைப் பராமரிப்பது இல்லை என விளக்கமளித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டு முதல் 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஒட்டுமொத்தமாக சுமார் 39 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்றும், 7 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு என்பது உண்மையல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதாகக் கூறும் பத்மா, கட்டாயப் பரிசோதனை எதுவும் நடத்தப்படுவதில்லை என விவரித்துள்ளார்.
கர்நாடகாவில் ஆண்டுக்கு சராசரியாக 11 ஆயிரம் முதல் 12 ஆயிரம் புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் கண்டறியப்படுவதாகவும், சுமார் 56 ஆயிரம் பேர் தங்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சுமார் 23,000 பேர் அரசின் இலவச சிகிச்சையைப் பெற்று வருவதாகவும், இதில் 96% பேருக்கு வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கர்நாடக எய்ட்ஸ் தடுப்பு சங்கம் கூறியுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


