Last Updated:
பசுமையான காடுகளையும் ஆரோக்கியமான சூழல் மண்டலத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்
உலகப் புலிகள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ‘X’ தளம் வாயிலாக நாட்டு மக்களுக்கும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கும் வாழ்த்துகளையும், புலிகள் பாதுகாப்பு குறித்த முக்கியச் செய்தியையும் பகிர்ந்துள்ளார். புலிகள் பாதுகாப்பில் உலகிற்கே இந்தியா முன்மாதிரியாக திகழ்கிறது என்றும் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
உலகின் மொத்தப் புலி எண்ணிக்கையில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தியாவில் உள்ளன என்பதைப் பெருமையுடன் சுட்டிக்காட்டிய பிரதமர், இயற்கையோடு இயைந்து வாழ்வதும் வனவிலங்குகளைத் தெய்வமாக மதிப்பதும் இந்தியக் கலாச்சாரத்தின் அங்கமாக இருந்து வருகிறது என்றார். 2010-ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உச்சிமாநாட்டில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு முன்னதாகவே இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வெற்றி சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புலிகள் பாதுகாப்பில் கேமரா பொறிகள், செயற்கைக்கோள் வரைபடம் மற்றும் ட்ரோன் கண்காணிப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆகியவை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தி, இரவும் பகலும் உழைக்கும் வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சேவையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்கள் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், உள்ளூர் சமூகங்களின் பங்கேற்புடன் கூடிய அறிவியல் அணுகுமுறையே இதற்குத் தீர்வாகும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
காடுகளைச் சுற்றி வாழும் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சூழல் சுற்றுலாவின் வருவாயில் ஒரு பங்கை அவர்களுக்கு வழங்குவதுடன், வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் மற்றும் கால்நடை இழப்புகளுக்கு விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினருக்காகப் பசுமையான காடுகளையும் ஆரோக்கியமான சூழல் மண்டலத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


