பனந்துறை கடற்கரைப் பகுதியில் நீல போத்தல் ஜெல்லி மீன் (Physalia) எனப்படும் கடல் உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறித்து, தேசிய நீரக வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகாமதரகம் (NARA) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. கடற்கரைக்குச் சென்ற பலருக்கு ஜெல்லி மீன் தீண்டியதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்கரைப் பகுதியில் ஜெல்லி மீன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பனந்துறை மாநகரசபை அறிவித்ததை அடுத்து, இந்த விசாரணை தொடங்கப்பட்டது. நிலைமையை நேரில் ஆராயவும், இனத்தை கண்டறியவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் NARA அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (28) மாலை கடற்கரைக்கு விஜயம் செய்தனர்.
முழு பனந்துறை கடற்கரைப் பகுதியிலும் நீல போத்தல் ஜெல்லி மீன்கள் அடித்து வரப்பட்டிருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக NARA அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று பனந்துறை கடற்கரையில் நீந்திய பலரை ஜெல்லி மீன்கள் தீண்டிய சம்பவத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினர்.
நீல போத்தல் ஜெல்லி மீன் அதன் வலிமிகுந்த கொட்டும் தன்மைக்கு (தீண்டுதலுக்கு) பெயர் பெற்றது. சில சந்தர்ப்பங்களில் இது கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஜெல்லி மீன்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடலில் இறங்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் NARA அறிவுறுத்தியுள்ளது.


