Business
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவில் விரைவில் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாக உள்ளது. இது தொடர்பாக ஒரு சோதனை நடத்த ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான தலா 100 கோடி பாலிமர் நோட்டுகள் அச்சிடப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்படவுள்ளன. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
நாடு முழுக்க இப்போது காகித ரூபாய் நோட்டுகளே புழக்கத்தில் உள்ளன. இந்த காகித நோட்டுகள் எளிதாக கிழியும் தன்மை கொண்டது. இந்தியாவில் ரொக்கம் அதிகம் புழக்கத்தில் இருக்கும் சூழலில், அது ஈஸியாக கிழிவது பெரிய பிரச்சினை தான். இதனால் நாம் ரூபாய் நோட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கிறது. இதற்கே ரிசர்வ் வங்கிக்கு கணிசமாக செலவாகிறது.

பிளாஸ்டிக் நோட்டுகள்
இதற்கிடையே ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இப்போது இந்த தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுதரி மக்களவையில் தெரிவித்தார். ஏற்கனவே பல்வேறு நாடுகளிலும் பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் இருந்தாலும் கூட இந்தியாவில் அவை எப்படி செயல்படும், எவ்வளவு காலம் உழைக்கும் என்பது குறித்து ஆய்வு நடத்த இந்த சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார். இந்த முதற்கட்ட ஆய்வு வெற்றிகரமாக முடிந்த பிறகு.. நாடு முழுவதும் பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அனுமதி
கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதை இப்போது மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. மேலும், இந்த சோதனைக்கு தேவையான ஒப்புதலையும் கொடுத்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் அதிக நாட்கள் நீடிக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகின் பல நாடுகளில் பிளாஸ்டிக் நோட்டுகள் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அதிகளவில் ரொக்க பரிவர்த்தனை நடைபெறும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஏன் தேவை?
பாலிமர் பிளாஸ்டிக் நோட்டுகள் எளிதில் கிழியாது, ஈரத்தால் பாதிக்கப்படாது என்பதே இதன் மிக பெரிய பலம். மேலும், இது அழுக்காகவும் வாய்ப்பு குறைவு தான். இந்த பிளாஸ்டிக் நோட்டுகளில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டு வர முடியும் என்பதால் கள்ள நோட்டுகளை தடுப்பதிலும் இவை மிக பெரியளவில் உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
காகித நோட்டுகள் என்னவாகும்?
பிளாஸ்டிக் நோட்டுகள் வருவதால்.. தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித நோட்டுகள் நீக்கப்படுமா? என்ற கேள்வி பலருக்கும் வரும். ஆனால், அவை உடனடியாக புழக்கத்தில் இருந்து நீக்கப்படாது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் தொடர்ந்தும் புழக்கத்தில் இருக்கும். காகித நோட்டுகளை முழுமையாக நீக்கிவிட்டு, அவற்றுக்கு பதிலாக உடனடியாக பிளாஸ்டிக் நோட்டுகளை மட்டுமே பயன்படுத்தும் எந்த திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் நோட்டுகள் வரும்போது, அது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று ரிச்ரவ் வங்கி கூறியுள்ளது. நோட்டுகள் நடைமுறைக்கு வந்த பிறகே அதை மதிப்பிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ரொக்கப் பரிவர்த்தனையும், டிஜிட்டல் பரிவர்த்தனையும் வழக்கம் போலவே தொடரும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.




