Last Updated:
தேர்வு முறைகேடுகளைத் தடுக்க புதிய சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல். 10 ஆண்டுகள் சிறை, ₹10 கோடி அபராதம் விதிக்கப்படும்.
பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சம் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்த நிலையில், வரும் காலங்களில் தேர்வு முறைகேடுகள் நடைபெறாதபடி தடுக்க மத்திய அரசு சட்டத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது. பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்பு என்ற அந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவில் செய்யப்படும் இந்தத் திருத்தம், நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு தற்போது உள்ள குறைந்தபட்ச 3 ஆண்டு சிறை தண்டனை 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. அதிகபட்சமாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். திட்டமிட்டு, வினாத்தாள்களை கசிய விடுபவர்களுக்கு குறைந்தபட்ச சிறை தண்டனை 7 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. மேலும், 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன், வினாத்தாள் கசிவு வழக்குகளை விசாரிக்க மத்திய அரசு சிறப்பு பணிக்குழுவை அமைக்க வழிவகை செய்யப்படுகிறது. இத்தகைய வழக்குகளின் விசாரணை இரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள், நாள்தோறும் விசாரணை நடத்தி வழக்கை முடிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


