இந்திய பிரதமராக நரேந்திர மோடி முதல் முறையாக அரியணை ஏரிய போது, பெட்ரோலியத்துறைக்கு தனி பொறுப்புடன் கூடிய அமைச்சரானார் தர்மேந்திர பிரதான்… பின்னர், 2017- ஆம் ஆண்டு அதே துறைக்கு கேபினட் அமைச்சரானார். நான்கு ஆண்டுகள் கழித்து பிரதானுக்கு கல்வித் துறை வழங்கப்பட்டது. மோடியின் இரண்டாவது அரசிலும் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராகவே தொடர்ந்தார். தர்மேந்திர பிரதான் பதவி காலத்தில் நீட் தேர்வு மீதான நம்பிக்கையை முதன்முதலில் கேள்விக்குள்ளாக்கியது 2024-இல் நடந்த விவகாரம்.
அப்போது பிகார், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்து லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. சில மாணவர்கள் 718 மற்றும் 719 மதிப்பெண்களைப் பெற்றிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நீட் தேர்வின் மதிப்பெண் முறையின்படி, ஒரு மாணவர் 720, 716 அல்லது 715 மதிப்பெண்களை மட்டுமே பெற முடியும்.
718 அல்லது 719 பெறுவது கணித ரீதியாகச் சாத்தியமே இல்லை என்பதால் மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தேகம் எழுந்தது. நெருக்கடி அதிகமானதை அடுத்து NTA வெளியிட்ட விளக்கத்தில், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் 6 தேர்வு மையங்களில் வினாத்தாள் குளறுபடியால், நேரம் வீணாணதாகவும் அதனை சரிக்கட்ட
1,563 மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது மட்டுமல்லாமல் ஹரியானாவின் ஒரே ஒரு தேர்வு மையத்தில் 6 பேரு முழு மதிப்பெண்கள் பெற்றனர்.. நாடு முழுவழம் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றதும் சந்தேகத்தை எழுப்பியது.
“வினாத்தாள் கசியவில்லை, NTA ஒரு வெளிப்படையான அமைப்பு” என தர்மேந்திர பிரதான் கூறியதும் கல்வியாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்ட களத்தில் குதித்ததால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு NTA தலைவராக இருந்த சுபோத் குமார் சிங் நீக்கப்பட்டார். 2024 சர்ச்சைக்குப் பிறகு தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டிலும் மிகப்பெரிய முறைகேடு நடந்தது.
மே 3- ஆம் தேதி, நடைபெற்ற தேர்வுக்கு முன்பாகவே, ராஜஸ்தான் சிகார் பகுதியிலிருந்த பயிற்சி மையங்கள் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் வினாத்தாள் கசிந்தது. சுமார் 111- வினாக்கள் அசல் வினாத்தாளுடன் ஒத்துப்போயின. வினாத்தாள் கசிந்தது உறுதி செய்யப்பட்டதால் மே 12- ஆம் தேதி, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்து, விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்தது.
20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு ஜூன் 21 அன்று மறுதேர்வு நடத்தப்பட்டு, ஜூலை 16 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேசியத் தேர்வு முகமையின் நிர்வாகச் சீர்கேடுகள் அமைச்சர் பிரதான் மீதான முக்கிய விமர்சனமாக மாறின.
NTA-வின் வினாத்தாள் தயாரிப்பு, விநியோகம் மற்றும் தேர்வு மையங்களின் கண்காணிப்பு ஆகியவற்றில் இருந்த ஓட்டைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கசிந்த வினாத்தாள்களைப் பெறுவதில் பெருநகரப் பயிற்சி மையங்கள் மற்றும் இடைத்தரகர்கள் கார்டெல் போலச் செயல்பட்டது விசாரணையில் அம்பலமானது.
நீட் மட்டுமல்லாது, NTA நடத்திய UGC-NET மற்றும் CSIR-NET தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதால், NTA அமைப்பை முழுமையாகக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ச்சியான தேர்வு ரத்துகள், மறுதேர்வுகள் மற்றும் குளறுபடிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகப் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகின.
மாணவர் போராட்டங்களின் தீவிரத்தைக் கையாள முடியாமல் ஏற்பட்ட தார்மீக அழுத்தத்தின் காரணத்தினாலேயே தர்மேந்திர பிரதான் தனது மத்தியக் கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2018-ஆம் ஆண்டு மத்திய இணை அமைச்சராக இருந்த எம். ஜே. அக்பர் ராஜினாமா செய்ததிற்கு பிறகு தற்போது பிரதான் பதவி விலகியுள்ளார். இந்திய அளவில் தீவிரமடைந்த ‘மீடூ’ இயக்கத்தின் போது, பெண் பத்திரிகையாளர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து எம். ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

