Last Updated:
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், தற்காலிக தீர்வுகள் பல ஆண்டுகளாக சிக்கலாகவே இருந்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதிகள், நிரந்தர கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களே தேவை என வலியுறுத்தி வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு வினாத்தாள்களை விமானப்படை விமானங்களில் கொண்டு செல்ல முடியாது என, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வினாத்தாள் முறைகேடு தொடர்பாக அகில இந்திய மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதி நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு தரப்பில் கோரப்பட்டது.
அப்போது, இதுவரை மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யாததற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நீட் தேர்வை ஒருமுறை நடத்துவதற்கு பதிலாக ஆண்டுக்கு பலமுறை நடத்துவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்றனர்.
மேலும், தற்காலிக தீர்வுகள் பல ஆண்டுகளாக சிக்கலாகவே இருந்து வருகின்றன என குறிப்பிட்ட நீதிபதிகள், நிரந்தர கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களே தேவை என வலியுறுத்தி வழக்கின் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், மாணவர் போராட்டத்தின்போது காவல் துறையின் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மனுவை பட்டியலிட மறுத்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் தவறானவை என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
“நீட் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் தேவை” – வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!


