ஒலிம்பிக் பேட்மிண்டன் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையிலிருந்து, உலகத் தரவரிசையில் முதலிடத்தை அடைந்தது வரை, முன்னாள் உலக நம்பர் 1 வீராங்கனையான சாய்னா நேவால் ஒரு முழுத் தலைமுறைக்கே உத்வேகம் அளித்தார். இந்தியாவை ஒரு உலகளாவிய பேட்மிண்டன் வல்லரசாக உயர்த்த அவர் உதவினார்.
ஆனால், அத்தனை பதக்கங்களையும் மைல்கற்களையும் பெற்றிருந்தபோதிலும், அந்த நிலையை அடைய என்னவெல்லாம் தேவைப்பட்டது. கிரிக்கெட் அல்லாத ஒரு விளையாட்டில், இந்த நாட்டில் தனித்து வளர்ந்து வரும் ஒரு நட்சத்திரத்திற்கு ஏற்படும் தடைகளையும் சாய்னா நியூஸ்18-இன் ரைசிங் பாரத் இந்தியா நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெறும் நியூஸ்18-இன் ரைசிங் பாரத் இந்தியா உச்சிமாநாடு (தெற்குப் பதிப்பு) பேசிய சாய்னா, இங்கு கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அவர்களிடம் ஒரு மிகச் சிறந்த அமைப்பும், மிகவும் நேர்த்தியாக நடத்தப்படும் லீக்குகளும் இருப்பதுதான். மேலும், அவற்றை அவர்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறார்கள். மற்ற விளையாட்டுகளுக்கு அதே அளவிலான வெளிச்சம் கிடைக்காததால் அவை பாதிக்கப்படுகின்றன என்றார்.
தொடர்ந்து பேசிய சாய்னா நேவால், பல்வேறு விளையாட்டுகளில் வேறு போட்டிகள் நடந்துகொண்டிருக்கலாம், ஆனால் தீவிர ரசிகர்கள் மட்டுமே அவற்றைப் பார்ப்பார்கள். அதனால்தான், விளையாட்டுச் சங்கங்களும் இந்திய விளையாட்டு ஆணையமும் (SAI) விளையாட்டுகளை இன்னும் சிறப்பாக சந்தைப்படுத்தி, விளம்பரத்தை அதிகரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் அவை கிரிக்கெட்டின் நிலைக்கு உயர முடியும் என்றும் தெரிவித்தார்.
இளம் வயது கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷியை உதாரணமாகக் கொண்டு, கிரிக்கெட்டின் சூழலமைப்பு, நம்பிக்கைக்குரிய வீரர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உலகத் தரம் வாய்ந்த வாய்ப்புகளை எவ்வாறு வழங்குகிறது என்பதை சாய்னா நேவால் பகிர்ந்து கொண்டார்.
உதாரணமாக, வைபவ் சூர்யவன்ஷியை எடுத்துக்கொள்ளுங்கள். அவரது விளையாட்டு வாழ்க்கைக்காக அவர் ஏற்கனவே பெற்றுவரும் ஆதரவையும் வசதிகளையும் பாருங்கள். மற்ற விளையாட்டுத் துறைகளில் நம்மிடம் ஏதோ ஒரு வகையில் இது இல்லை என்றே நான் நினைக்கிறேன். நான் வளர்ந்து வந்த காலத்தில், எனக்கு பிசியோதெரபிஸ்டுகளோ, பயிற்சியாளர்களோ அல்லது வேறு யாருமே இல்லை. எனக்கு 19 வயதாக இருந்தபோதுதான் முதல் பிசியோதெரபிஸ்ட் கிடைத்தார்.
அப்போதுதான், போட்டியிடுவதற்கு உதவ உணவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மனநலப் பயிற்சியாளர்கள் என ஒரு முறையான குழுவின் அவசியத்தை நான் உணர்ந்தேன். அடிப்படையில், ஒரு விளையாட்டு வீரர் பெறும் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட அளவு வெற்றியை அடைந்த பிறகே கிடைக்கிறது. இது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

