Last Updated:
அமெரிக்கா 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சுங்க வரி விதித்துள்ளது. இந்தியாவுக்கு 10% வரி, மற்ற 59 நாடுகளுக்கு 12.5% வரி. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
அமெரிக்காவுக்கு இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய சுங்க வரி அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாயத் தொழிலாளர் நடைமுறைகளை தடுக்கத் தவறியதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும், மேலும் 59 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 12.5 சதவீதம் வரையும் புதிய சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சுங்க வரி உடனடியாக அமலுக்கு வருவதாக அந்நாட்டு வர்த்தக பிரதிநிதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் மொத்த வர்த்தகத்தில் சுமார் 99.4 சதவீதத்தை உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமலில் இருந்த தற்காலிக 10 சதவீத சுங்க வரி முறை முடிவுக்கு வந்த நிலையில், இந்த புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
கட்டாயத் தொழிலாளர் தடை விதிகளை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்துள்ள நாடுகளுக்கு 10 சதவீதம் மட்டுமே சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
முதலில் இந்தியாவுக்கு 12.5 சதவீத சுங்க வரி விதிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏற்கெனவே எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள துறைவாரியான சுங்க வரிகளில் இந்த புதிய அறிவிப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமெரிக்கா விளக்கியுள்ளது.


