சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சுகவீனமுற்றுள்ளதாக அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி உதேஷ் ரணதுங்க, விசாரணையை அடுத்த தவணைக்கு ஒத்திவைத்தார்.
தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 730 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்தியதன் மூலம் பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக யோஷித ராஜபக்ஷ மீது சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாட்சியமளிப்பதற்காக நீதிமன்றத்தில் இன்றையதினம் ஆஜராகியிருந்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை அடுத்த தவணையிலும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.