சிரம்பான், இஸ்ரேலியக் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் புத்ராஜயாவின் கொள்கை தொடர்பாக, மலேசியாவுடனான தனது பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மறுபரிசீலனை செய்ய அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பு “தவறானது” என்று பிரதமர் அன்வர் இப்ராஹிம் விவரித்தார். இந்த யோசனையை முன்வைத்த எட்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உலகளாவிய நிகழ்வுகளைப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று அன்வர் கூறினார்.
பல நாடுகள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன, மலேசியாவும் பல தசாப்தங்களாக அவ்வாறு செய்து வருகிறது.இப்போது அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எனக்கும் மலேசியாவிற்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். மேலும் அமெரிக்க அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றனர் என்று அவர் இங்கு செய்தியாளர்களிடம் கூறினார்.
மற்ற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதைப் போலவே, மலேசியா அமெரிக்காவுடனும் தொடர்ந்து நல்லுறவைப் பேணும், ஆனால் மத்திய கிழக்கில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து மௌனமாக இருக்காது என்று அன்வார் கூறினார். பாலஸ்தீனம் மற்றும் காசா உட்பட, அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த அத்துமீறல்களுக்கு எதிராகப் பேசுவதற்கு நாங்கள் தயங்கவோ அல்லது பயப்படவோ முடியாது என்று அவர் கூறினார்.



