கைது செய்யப்படுவதற்கு முன்னதாகப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கல்விச் சீர்திருத்தங்கள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புணர்வைக் கோரி, மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ‘கரப்பான் பூச்சி’ (Cockroach) போராட்டங்களுக்கு ஆதரவாக அவர் இந்த தர்ணாவில் ஈடுபட்டார்.
ராகுல் காந்தியுடன் சேர்ந்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர் கைது செய்யப்பட்ட போது காயமடைந்ததாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் மூலம் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் பரீட்சை முறையில் ஏற்பட்டுள்ள தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்னதாகப் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கல்வியமைச்சர் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரினார்.
புதுடெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திங்களன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தடியடியைப் பயன்படுத்தினர். இந்த மோதல்களில் 118 பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் 60 போராட்டக்காரர்கள் உட்பட மொத்தம் 180 பேர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்களால் தொடங்கப்பட்ட ‘கரப்பான் பூச்சி’ இயக்கம் தற்போது தொழில் வல்லுநர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் உள்ளடக்கி விரிவடைந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் மோடி அரசாங்கத்துக்கு எதிராக உருவான மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கல்வி முறையில் மாற்றம் ஏற்படும் வரை இந்தப் போராட்டங்கள் தொடரும் என்று போராட்டக்காரர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

