Last Updated:
ஈரான் செல்ல திட்டமிட்ட இந்தியர்கள் பயணத்தை ஒத்திவைக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ளவர்கள் வெளியேறவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் வர திட்டமிட்டுள்ள இந்தியர்கள் பயணத்தை ஒத்திவைக்க வேண்டுமென ஈரானில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஈரானும் மாறி மாறி தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் நிலவும் நிலையற்ற தன்மையை கருத்தில் கொண்டு இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, எந்தவொரு நோக்கத்திற்காகவும் ஈரானுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ள இந்தியர் பாதுகாப்புச் சூழல் சீரடையும் வரை பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய விமானச் சேவைகளைப் பயன்படுத்தி அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் எனவும், ஈரானிலேயே தொடர்ந்து இருக்க முடிவு செய்யும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகள் போன்ற அதிக இராணுவ நடமாட்டம் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


