Last Updated:
Sonam Wangchuk | சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வரும் சோனம் வாங்சுக், நாடாளுமன்றம் நோக்கி நாளை நடைபெறும் பேரணியைப் பெரியளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 20 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில், அவரது உடல்நிலை பலவீனமடைந்ததை அடுத்து, காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக சப்தர்ஜங் மருத்துவமனையில் நேற்று காலை அனுமதித்தனர்.
சோனம் வாங்சுக்கின் உடல் செயல்பாடுகள் சீராக உள்ளதாகவும், இருப்பினும், அவரது ரத்த அளவு சிறிதளவு மாற்றமடைந்துள்ளதாகவும் சப்தர்ஜங் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நீண்டகால உண்ணாவிரதத்தால் ஏற்படும் உடல் ரீதியான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, பல்துறை நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பின் கீழ் அவருக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், தான் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சோனம் வாங்சுக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது கைப்பட ஆதரவாளர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நீட் வினாத்தாள் கசிவு போன்ற அநீதிகளில் இருந்தும், தனது சட்டவிரோத தடுப்புக் காவல் போன்ற அச்சுறுத்தல்களில் இருந்தும் விடுதலை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளை காலை கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெறும் பேரணி இந்தியாவின் இரண்டாவது சுந்தரப் போராட்டம் என்று வர்ணித்துள்ள சோனம், இந்தப் பேரணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக்கை தனியார் மருத்துவமனையில் சேர்க்க உத்தரவிடக் கோரி அவரது மனைவி கீதாஞ்சலி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது கணவரின் விருப்பத்திற்கு மாறாக அவரை அரசு மருத்துவமனையில் வைத்திருப்பதாகவும், அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கீதாஞ்சலி குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கீதாஞ்சலி கோரிக்கை வைத்துள்ளார்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
20 நாள் உண்ணாவிரதத்தால் வந்த பாதிப்பு… மருத்துவமனையில் இருந்து சோனம் வாங்சுக் வைத்த ஒரு கோரிக்கை! | Sonam Wangchuk


