Business
oi-Vigneshkumar
சென்னை: தங்கம் விலை இப்போது தடுமாறி கொண்டு இருக்கிறது. இதுதான் நல்ல சான்ஸ் என்பதால் பொதுமக்களும் கூட தங்கத்தை முடிந்த வரை வாங்கி வருகிறார்கள். இதற்கிடையே தங்கத்திற்கு என்ன எதிர்காலம் இருக்கிறது. அதில் தற்போது இருக்கும் மிக பெரிய சிக்கல் என்ன என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு கூட தங்கம் விலை ஒரு கிராமே ரூ.15,000ஐ தாண்டியது. இதனால் ஏழை, மிடில் கிளாஸ் மக்கள் தங்கத்தை வாங்க முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஆனால், இப்போது நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து சரிந்தே வருகிறது.

ஆனந்த் சீனிவாசன்
அதிலும் குறிப்பாக முன்பெல்லாம் போர் பதற்றம் இருக்கும் போது தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை அது சடன் பிரேக் போட்டு யூடர்ன் போட்டுள்ளது. போர் காலத்திலும் தங்கம் விலை குறைவது பலருக்கும் குழப்பமாகவே இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
தங்கம் விலை
இது தொடர்பாக ஆனந்த் சீனிவாசன் கூறுகையில், “தங்கம் விலை சீராக சரிந்து வருகிறது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 4000 டாலரை உடைந்துவிட்டது. ஏற்கனவே தங்கம் விலை சரியும் என்றே நான் சொல்லி இருந்தேன். அதன்படியே நடக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைய தான் போகிறது. அமெரிக்காவில் நிலைமை செட்டில் ஆகும் வரை இதே நிலை தான் இருக்கும். அமெரிக்காவில் பங்குச்சந்தையும் சரிவில் தான் இருக்கிறது.
வாங்க மாட்டார்கள்
வெள்ளி விலையும் கூட சரிந்தே வருகிறது. இப்போது வெள்ளி ப்யூச்சர்ஸ் மார்கெட்டில் ரூ.2.15 லட்சம் ஆகிவிட்டது. அதாவது இப்போது நீங்கள் உங்களிடம் இருக்கும் வெள்ளியை விற்க போனால் யாரும் ரூ.2 லட்சத்திற்கு கூட வாங்க மாட்டார்கள் என்பதே உண்மை. கச்சா எண்ணெய் விலையும் கூட போர் பதற்றம் காரணமாக சற்றே உயர்ந்துள்ளது.
வளைகுடாவில் பதற்றம் நிலவும் சூழலில் நிலைமையை சமாளிக்க பல வழிகளில் முயல்கிறார்கள். சவுதிக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே செங்கடல் இருக்கிறது. அதன் வழியாக வர்த்தகம் செய்ய சவுதி முயல்கிறது. ஆனால், ஏமனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவானவர்கள். எனவே, அவர்களும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
போர் பதற்றம்
பலரும் இந்த போர் பதற்றம் நிலவும்போது கூட தங்கம் விலை ஏன் ஏறவில்லை என கேட்கிறார்கள். அதற்கான காரணம் ரொம்ப எளிமையானது. கச்சா எண்ணெய் எப்போதும் டாலரில் தான் வர்த்தகம் செய்யப்படும். எனவே, கச்சா எண்ணெய் விலை ஏறினால் டாலர் மதிப்பு உயரும். டாலர் மதிப்பு உயரும்போது தங்கம் விலை சரியும். இது தவிர அமெரிக்காவிலும் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. இப்போது தங்கம் விலை குறைய இதுவும் முக்கிய காரணம்! ஆனால், இதற்காக எல்லாம் நாம் கவலைப்பட தேவையில்லை” என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்!




