Last Updated:
பல்வேறு பழங்களுக்கு சீசன் இல்லாததும், கடும் வெயிலால் விளைச்சல் பாதிக்கப்பட்டதும் காரணமாக பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களின் தேவை பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது பல்வேறு பழங்களுக்கு சீசன் இல்லாததும், கடும் வெயிலால் விளைச்சல் பாதிக்கப்பட்டதும் காரணமாக சந்தைகளில் பழங்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது ஆப்பிள் ரகத்தைப் பொறுத்து ஒரு கிலோ ரூ.270, ரூ.280 மற்றும் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாதுளை கிலோ ரூ.160, ரூ.200, ரூ.260, சாத்துக்குடி ரூ.80, ரூ.100, ரூ.120, ஆரஞ்சு ரூ.160 முதல் ரூ.240 வரை, திராட்சை ரூ.100 முதல் ரூ.320 வரை, பேரிக்காய் ரூ.140-க்கும் விற்பனையாகி வருகிறது. இதேவேளை, மற்ற பழங்களுடன் ஒப்பிடும்போது மாம்பழத்தின் விலை மட்டுமே குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பழ வியாபாரி அருணாச்சலம் கூறுகையில், “தற்போது பல பழங்களுக்கு சீசன் இல்லாததாலும், கடும் வெயிலால் விளைச்சல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டதாலும் விலை உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், உடல்நலன் கருதியும், ஆடி மாத வழிபாடுகளுக்காகவும் பொதுமக்கள் பழங்களை வாங்கிச் செல்கின்றனர்,” என்றார்.
இந்த திடீர் விலை உயர்வு நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட மக்களை அதிகம் பாதித்துள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், ஆரோக்கியத்தை பேணவும் பழங்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பொதுமக்களுக்கு, இந்த விலை உயர்வு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.
Jul 17, 2026 12:41 PM IST

