தொடர்ந்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த ஆ. ராசா, “வாங்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகிறார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று அவரைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தரச்சொன்னார். அதனைத் தொடர்ந்து இன்று வாங்சுக்கைச் சந்தித்து திமுக சார்பில் ஆதரவு தந்தேன். இதற்கு பிறகும் ஒன்றிய அரசு பாராமுகமாக இருக்குமானால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்தார். சோனம் வாங்சுக்-கின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அறிவியலாளர், சிறந்த கல்வியாளர், உலகப் புகழ்பெற்ற சூழலியல் ஆர்வலர் எனப் பன்முகத் தன்மைகளைக் கொண்டவர் சோனம் வாங்சுக். 2009-ஆம் ஆண்டு வெளியாகி, இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்த திரைப்படம் ‘3 Idiots’. மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்ட இந்தியக் கல்வி முறையைச் சாடிய விழிப்புணர்வு படம். இப்படத்தில் அமீர்கான் நடித்த ‘புன்சுக் வாங்டு’ என்ற கதாபாத்திரம், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்தது.
திரையில் நாம் ரசித்த அந்தப் புன்சுக் வாங்டு, கற்பனைப் பாத்திரம் அல்ல; லடாக்கின் பனிமலைகளுக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருக்கும் சோனம் வாங்சுக் தான் அந்த பாத்திரம். இந்த சோனம் வாங்சுக் தான், தற்போது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
‘NEET தேர்வு முறைகேடு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி, காக்கரோஜ் ஜனதா கட்சி இளைஞர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தில் சோனம் வாங்சுக்-கும் பங்கேற்றுள்ளார்.
‘3 Idiots’ படத்தில் வரும் புன்சுக் வாங்டு, மனப்பாடம் செய்யும் கல்வி முறையைக் கடுமையாக எதிர்ப்பார். புத்தகப் புழுவாக இல்லாமல், கற்ற கல்வியைச் சுற்றியுள்ள சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். நிஜ வாழ்க்கையில் சோனம் வாங்சுக் இதையேதான் செய்தார்.
லடாக்கின் அரசுப் பள்ளிகளில் 95% மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியடைவதைக் கண்டு கலங்கிய அவர், 1988-ல் தொடங்கிய அமைப்புதான் Students’ Educational and Cultural Movement of Ladakh. லடாக்கின் லே மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வாங்சுக்-கின் இந்த கல்வி வளாகம் முழுவதும், சூரிய சக்தியால் இயங்குகிறது. லடாக்கின் மைனஸ் 30 டிகிரி குளிரிலும், இந்த வளாகத்திற்குள் எந்தவித செயற்கை ஹீட்டரும் இன்றி 15 முதல் 20 டிகிரி வெப்பம் இயற்கையாகவே பராமரிக்கப்படுகிறது.
இங்கு கருவிகளை உருவாக்குவது, விவசாயம் செய்வது போன்ற நடைமுறைப் பயிற்சிகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. 3 Idiots’ படத்தின் இறுதிக்காட்சியில், புன்சுக் வாங்டு பல விசித்திரமான கண்டுபிடிப்புகளைத் தன் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து உருவாக்கியிருப்பார். இதேப் போல் நிஜ வாழ்க்கையில் சோனம் வாங்சுக் செய்த சுற்றுச்சூழல் புரட்சி ஒட்டுமொத்த உலகையுமே வியக்க வைத்தது.
லடாக் ஒரு குளிர்காலப் பாலைவனம். அங்கு கோடைக் காலத்தில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக சோனம் வாங்சுக் கண்டுபிடித்ததுதான் “ஐஸ் ஸ்தூபிகள்” குளிர்காலத்தில் வீணாகப் பாயும் தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து, காற்றில் தெளிப்பதன் மூலம் அவை உறைய வைக்கப்பட்டு, பௌத்த ஸ்தூபிகள் வடிவிலான பிரம்மாண்ட செயற்கைப் பனிப்பாறைகளாக மாற்றப்படுகின்றன.
இந்த வடிவமைப்பு வசந்த காலத்தின் பிற்பகுதி வரை உருகாமல் இருந்து, கோடைக் காலத்தில் லடாக் விவசாயிகளுக்குத் தேவையான நீர் ஆதாரத்தை தடையின்றி வழங்குகிறது. சோனம் வாங்சுக்கின் இந்த அளப்பரிய கல்வி மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளைப் பாராட்டி, சர்வதேச சமூகமும் இந்திய அரசாங்கமும் பல உயரிய விருதுகளை வழங்கியுள்ளன.
இதற்கு முன்பாக, லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் வாங்சுக் பல முறை அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார். தற்போது, மாணவர்களின் எதிர்காலத்திற்காக போராட்டம் நடத்தி வரும் வாங்சுக் பல்வேறு அமைப்புகளும் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன… வாங்சுக்-கின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு செவிசாய்க்காமல் உள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

