
இங்கிலாந்து, ஆர்ஜென்டீனாக்டையேயான உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி முடிந்த பிறகும், இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் போக்கு ஓயவில்லை. போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர மத்தியகளவீரர் ஜூட் பெல்லிங்ஹாம், ஆர்ஜென்டீனாவின் மாற்று ஆட்டக்காரர் வலென்டின் பார்கோவின் தலையில் அறைந்த சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மைதானத்தில் நடந்தது என்ன?
போட்டி முடிந்த பின் இரண்டு அணி வீரர்களும் மைதானத்தில் இருந்தனர்.
- பார்கோவின் கொண்டாட்டம்: இந்த போட்டியில் விளையாடாத ஆர்ஜென்டினாவின் இளம் வீரர் பார்கோ, போட்டி முடிந்ததும் மைதானத்திற்குள் ஓடிவந்து தனது சக வீரர்களைக் கட்டிப்பிடித்து வெற்றியைக் கொண்டாடினார்.
- பெல்லிங்ஹாமின் ஆக்ரோஷம்: பார்கோ கொண்டாடிக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் நடந்து வந்த பெல்லிங்ஹாம், திடீரென பார்கோவின் தலைக்கு பின்புறம் ஓங்கி ஒரு அறை விட்டார்.
- திடீர் மோதல் : இதனால் கோபமடைந்த ஆர்ஜென்டீனா வீரர்கள் பெல்லிங்ஹாமை நோக்கி பாய்ந்தனர். இரண்டு அணி வீரர்களும் ஒருவரையொருவர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட, மைதானத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பெல்லிங்ஹாம் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
மோதலுக்கான பின்னணி என்ன?
பெல்லிங்ஹாம் ஏன் இப்படி நடந்துகொண்டார் என்பதற்கான தெளிவான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், போட்டியின்போது நடந்த ஒரு விஷயம் தான் இதற்குக் காரணம் என காணொளி பதிவுகள் காட்டுகின்றன.
போட்டியின் 85ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்டீனாவின் என்ஸோ பெர்னாண்டஸ் சமநிலை கோல் அடித்தபோது, மாற்று ஆட்டக்காரர்கள் வரிசையில் இருந்த பார்கோ மைதானத்திற்குள் ஓடிவந்து, சோகத்தில் இருந்த இங்கிலாந்து வீரர்களின் முகத்திற்கு நேராக ஆக்ரோஷமாகக் கொண்டாடியுள்ளார். இந்த ஆத்திரத்தை மனதில் வைத்தே பெல்லிங்ஹாம் போட்டி முடிந்ததும் பார்கோவைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

