தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்.. TASMAC எடுக்கும் புதிய அஸ்திரம்.. உணவு + மதுபானம்!
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் என்பது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் கருவியாக இருக்கும் இதேவேளையில், பல்வேறு பிரச்சனைகள் இதை சுற்றி உருவாகியுள்ளது. உதாரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கம் விஜய் தலைமையிலான அட்சியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைக்கு பின்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.
அடுத்தாக டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு, பிற மாநிலங்களில் கிடைக்கும் மதுபான வகைகள் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம், டாஸ்மாக் கடைகளின் தரத்தையும், சுத்தத்தையும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி துறை ரீதியிலான பல மாற்றங்களையும், மேம்பாடுகளையும் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தலைமையில் புதியதொரு மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது.

இதன் நீட்சியாக TASMAC மூலம் கூடுதல் வருமானத்தை ஈட்டும் வகையில், தமிழ்நாட்டில் உணவகத்துடன் கூடிய மதுபான கூடம் அதாவது ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரெஸ்டோ பார் என்பது ஹோட்டல் போலவே உயர்தர கட்டமைப்புகள் உடன் இயங்கும் பார் வகை. இங்கு மக்கள் வெறும் உணவு வேண்டும் என்றாலும் சாப்பிடலாம், அதேபோல் உணவுடன் மதுபானத்தையும் அருந்தலாம். இத்தகைய ரெஸ்டோ பார்கள் பெங்களூர், சென்னை, ஹைதரபாத் பாண்டிசேரிகளில் அதிகம் உள்ளது. இளம் தலைமுறையினர் பார் வைப்-ஐ பெற வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிட மட்டுமே ரெஸ்டோ பார்களுக்கு அதிகம் செல்ல துவங்கியுள்ளனர்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் ரெஸ்டாரண்ட் வித் பார் என சொல்லக்கூடிய ரெஸ்டோ பார் மதுபான கூடத்திற்கு அனுமதி வழங்கப்படும் வேளையில், தமிழ்நாட்டிலும் இத்தகைய அமைப்புக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் திட்டமிட்டு வருகிறது.
இதேபோல் தற்போது டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து, ரெஸ்டோ பார்களாக இயங்க அனுமதி கொடுக்கவும் திட்டமிட்டு வருகிறது டாஸ்மாக் நிர்வாகம். எதற்காக இந்த திடீர் முடிவு..?
தமிழ்நாட்டில் FL2 மற்றும் FL3 உரிமம் அதாவது கிளப் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இயங்கும் பார்களில் விற்கப்படும் மதுபானத்திற்கு வாட் வரி பெரிய அளவில் வசூலிக்கப்படும் நிலையில், ரெஸ்டோ பார்-க்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அரசுக்கு கூடுதல் வரி வருமானம் கிடைக்கும்.
தற்போது மதுபானம் ஜிஎஸ்டி வரம்புக்குள் இல்லாமல் இருக்கும் காரணத்தால் தமிழ்நாடு அரசு மதிப்பு கூட்டு வரி அதாவது வாட் வரி மற்றும் கலால் வரி விதிக்கிறது. வாட் வரி + கூடுதல் வரி என மொத்தம் 16.5 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது ரெஸ்டோ பார் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது கூடுதல் வரி வருவாய் உருவாகும். இதேபோல் இதற்காக புதிய பார்களை அரசு திறக்காது, தற்போது பார் உடன் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை ரெஸ்டோ பார் ஆக மாற்றும் திட்டத்திலேயே உள்ளது.
மேலும் இத்திட்டத்தை சோதனை திட்டமாகவே தமிழ்நாடு அரசு செயல்படுத்த திட்டமிட்டு உள்ளது. இத்திட்டம் வெற்றிப்பெற்றால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறையவும் அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

