Business
oi-Vigneshkumar
சென்னை: இந்தியாவில் தங்கம் விலை இப்போது சீராக குறைந்து வரும் நிலையில், மக்கள் அதை வாங்க ஆர்வமாகவே இருக்கிறார்கள். இதற்கிடையே தங்கம் விலை சரிவதற்கான காரணத்தை நறுக்கென விளக்கியுள்ள பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், வரும் காலத்தில் தங்கம் சர்வதேச மார்கெட்டில் எப்படி இருக்கும்.. இந்தியாவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.
பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தில் கணிசமான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என கூறி வந்தவர். அப்போது தான் ஆபத்தான காலங்களில் அது நமக்கு கை கொடுக்கும் என்பதே அவரது வாதம்.

ஆனந்த் சீனிவாசன்
இப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதே டிரெண்ட் தான் நீடிக்கிறது. இந்தச் சூழலில் தான் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை சரிவது தொடர்பாக சில முக்கியமான கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தங்கம் விலை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தொடர்ந்து சரிந்தே வருகிறது. 24 கேரட் தங்கம், 22 கேரட் தங்கம் என இரண்டுமே சரிகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.235க்கு வந்துவிட்டது. வெள்ளி ப்யூச்சர்ஸ் இன்னுமே மோசமாக இருக்கிறது. தங்கத்தை பொறுத்தவரை சர்வதேச மார்கெட்டில் அது 4000 டாலரில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.
டாலர் மதிப்பு
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வக்கார் யூனிஸ் என்பவர் நம்ம ஊர் பும்ரா போல இன் ஸ்விங் யார்க்கர் போடுவதில் ஸ்பெஷலிஸ்ட். அதுபோல தான் டாலரை ரிசர்வ் வங்கி 100 பில்லியன் டாலர் ஷார்ட் அடித்த பிறகும் கூட ரூபாய் மதிப்பு சரிகிறது. கொஞ்சம் விட்டாலும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 98ஐ தொட்டுவிடும். மார்கெட் ஆட்டம் காட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர ஆரம்பித்துவிட்ட நிலையில், பிரச்சனை மோசமாகிக் கொண்டே போகிறது. இதனால் இந்திய பங்குச்சந்தைகள் சரிந்து வருகிறது. பொதுத்துறை வங்கிகள் தொடங்கிப் பல நிறுவனங்கள் சரிந்துள்ளன.
இந்தியா- அமெரிக்கா
ஒரு பக்கம் ஹார்முஸை சுற்றி சர்ச்சை நிலவுகிறது. தங்களுக்குச் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என அமெரிக்கா சொல்லியுள்ளது (பிறகு டிரம்ப் வழக்கம் போல அதை வாபஸ் வாங்கிவிட்டார் என்பது தனிக்கதை). அமெரிக்காவுக்குச் சரியான பதிலடி தருவோம் என ஈரான் எச்சரித்து வருகிறது. இதேபோன்ற நிலை தொடர்ந்தால் பங்குச்சந்தைகள் மேலும் சரியும். நமது வர்த்தக பற்றாக்குறை 430% அதிகரித்துள்ளது. இதுவும் ரூபாய் மதிப்பைப் படுத்தி எடுத்து வருகிறது. அதேநேரம் நமது அண்டை நாடான சீனா வர்த்தக உபரி இருக்கிறது. இதுவே நமது இருவருக்கும் உள்ள பிரதான வித்தியாசம்!
அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்த ரெடியாக இருக்கிறது. அங்கு பணவீக்கம் அதிகமாக இருப்பதாலும் டிரம்ப் போரைத் தொடர்வதாலும் 0.5% வரை வட்டி விகிதத்தை உயர்த்த பார்க்கிறார்கள். முதலில் இப்போது 0.25% உயர்த்தி, பணவீக்கம் கட்டுக்குள் வரவில்லை என்றால் கூடுதலாக 0.25% உயர்த்தலாம் என யோசிக்கிறார்கள். இப்படி 0.5% குறைத்தால் தங்கம் விலை 3600 டாலர் வரை போகும். ஆனால், அதற்கு முன்பே ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது” என்றார்.
என்ன ஆகும்?
அதாவது எப்போதுமே அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை சரிய ஆரம்பிக்கும். வரும் மாதங்களில் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு மிக அதிகம். அப்போது சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை குறையும். அதேநேரம் இந்தியாவில் ஏற்கனவே ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து வருவதால், தங்கம் விலை சர்வதேச சந்தையில் சரிந்தாலும் இந்தியாவில் அதே அளவுக்கு குறையாது என்பதே கசப்பான உண்மை!
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.




