யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும்
கும்பல் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி
ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில்
கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு
தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
காவல்துறை முறைபாடு
அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உங்களது காணி என்றால் ,
அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து என மிரட்டும் தொனியில்
கூறியுள்ளனர்.

உங்கள் காணி என்றால் அதற்கான ஆவணங்களை காட்டுங்கள் என காணி
உரிமையாளர் கேட்ட போது அவற்றை காட்ட வேண்டிய அவசியம் இல்லை என
மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் தான் காவல்துறை முறையிடுவதாக கூறி காணி உரிமையாளர் சென்று
கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த நிலையில், குறித்த
கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.
மிரட்டப்பட்ட காணி உரிமையாளர்
அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில்
வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்ட வேளை காணி உரிமையாளர்
சென்று கேட்ட போதும் காணி உரிமையாளரை மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அவர் காவல்துறைக்கு
தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ள முயன்ற வேளை காணியில் இருந்து வெளியேறி
சென்றுள்ளனர்.
குறித்த கும்பல் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் ,
வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள்
விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

