Last Updated:
ஒப்பந்தம் இரு நாடுகளிலும் முதலீடுகள், உற்பத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்கும் என்று இரு நாட்டு வணிக அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நீண்ட நாட்களாகப் பேச்சுவார்த்தையில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ (CETA) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் பொருளாதார உறவில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்த அமலாக்கத்தை வரவேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இது இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டுறவில் ஒரு “முக்கியமான தருணம்” என்று வர்ணித்துள்ளார். இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்த ஒப்பந்தங்களின் மூலம் இரு நாடுகளின் பொருளாதாரத் தொடர்புகள் மேலும் ஆழமடையப் போகின்றன. நமது பகிரப்பட்ட லட்சியங்களை, இரு நாட்டு மக்களுக்கான உறுதியான வாய்ப்புகளாக மாற்ற இந்த ஒப்பந்தங்கள் வழிவகுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நடுத்தரத் தொழில்களுக்கு (MSMEs) புதிய வேகத்தை அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த தாராளமய வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்யப்படும் ஆயிரக்கணக்கான பொருட்களுக்கான இறக்குமதி வரிகள் முழுமையாக நீக்கப்படுகின்றன அல்லது பெருமளவு குறைக்கப்படுகின்றன.
மதிப்பின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 99 சதவீதப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி சலுகை கிடைக்கிறது. இதனால் ஜவுளி, ஆடைகள், தோல் பொருட்கள், காலணிகள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி பெருமளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பிரதிபலனாக, பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஸ்காட்ச் விஸ்கி, ஜின் மற்றும் சில ஆடம்பர சொகுசு கார்கள் (Luxury Cars) மீதான வரிகளை இந்தியா படிப்படியாகக் குறைக்கும். இதன் மூலம் இந்த பொருட்கள் காலப்போக்கில் இந்தியச் சந்தையில் மலிவான விலையில் கிடைக்கக்கூடும்.
தற்போது இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு சுமார் 48 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் இருமடங்காக உயர்த்த இந்த ஒப்பந்தம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் இரு நாடுகளிலும் முதலீடுகள், உற்பத்தி மற்றும் புதிய வேலைவாய்ப்புகளைப் பெருமளவில் உருவாக்கும் என்று இரு நாட்டு வணிக அமைப்புகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
இந்தியா – UK தாராளமய வர்த்தக ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது! 2030-க்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இலக்கு


