பாதுகாப்பு வழக்கறிஞரான கிறிஸ் பிக்ஸ்லி மற்றும் ஓய்வுபெற்ற துப்பறியும் நிபுணர் நினெட் டூஸ்பய் ஆகியோர், ஸ்காட் பீட்டர்சன் பயணித்ததாகக் கூறப்படும் பெர்க்லி மெரினா வரையிலான பாதையை மீண்டும் ஆய்வு செய்கின்றனர்.
பட்டப்பகலில், சிறிய மீன்பிடிப் படகிலிருந்து ஒரு உடலை யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், தடயவியல் ஆதாரங்களை விட்டுச் செல்லாமல் கடலில் வீசுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று அவர்கள் வாதிடுகின்றனர். விசாரணையின்போது, ஸ்காட்டின் படகில் இருந்த ஒரு இடுக்கியில் லேசியின் இரண்டு தலைமுடிகள் சுற்றப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால், அந்த இடுக்கியில் ரத்தமோ அல்லது மனித திசுக்களோ காணப்படவில்லை என்றும், அது துருப்பிடித்து நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படாதது போலத் தோன்றியதாகவும் ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.
வழக்கின் மிக முக்கிய வாதங்களில் ஒன்று, கொலையைத் திட்டமிடுவதற்காகவே ஸ்காட் பீட்டர்சன் ரகசியமாக அந்த மீன்பிடிப் படகை வாங்கினார் என்பது. ஆனால், அந்தப் படகை வாங்கியது லேசிக்குத் தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில், அவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கையெழுத்துக் குறிப்புகளை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அரசுத் தரப்பின் ‘முன்கூட்டியே திட்டமிட்ட கொலை’ என்ற கோட்பாடு பலவீனமடைகிறது.
கொலை என்பதைத் தாண்டி, லேசி கடத்தப்பட்டிருக்கலாம் என்ற மற்றொரு கோட்பாட்டையும் இந்த ஆவணப்படம் மீண்டும் முன்னே கொண்டுவருகிறது. லேசி காணாமல் போன அன்று, பீட்டர்சன் வீட்டின் எதிரே உள்ள ஒரு வீட்டில் திருட்டு நடந்துள்ளது. மேலும், அன்று சந்தேகத்திற்கிடமான ஒரு வேனை அப்பகுதியில் கண்டதாக ஏழு சாட்சிகள் கூறியுள்ளனர். அவர்களில் ஒருவரான ரிசர்வ் காவல் அதிகாரி, கர்ப்பிணிப் பெண் ஒருவர் அந்த வேனில் வலுகட்டாயமாக ஏற்றப்பட்டதைப் பார்த்ததாக வாக்குமூலம் அளித்ததும் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதேச்சையாக , அந்த வேன் சுமார் 1.5 மைல் தொலைவில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதும், மோப்ப நாய் லேசியின் வாசனையை அந்தப் பகுதி வரை பின்தொடர்ந்ததும் வழக்கின் புதைக்கப்பட்ட உண்மைகளாக முன்வைக்கப்படுகின்றன.
ஸ்காட் பீட்டர்சனின் முன்னாள் வழக்கறிஞர் மார்க் ஜெராகோஸ், இன்றும் தனது கட்சிக்காரர் நிரபராதி என்று உறுதியாக நம்புகிறார். “நான் கையாண்ட மற்ற எல்லா வழக்குகளையும் விட இந்த வழக்குதான் என் தூக்கத்தைக் கெடுக்கிறது. என் கட்சிக்காரர் நிரபராதி என்று நான் நம்பும்போது ஏற்படும் வலி அது” என்று அவர் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய தனது அனுபவத்தின் அடிப்படையிலேயே இதைத் தெரிவிப்பதாகவும், ஒரு குற்றத்தைச் செய்தவர் யார், செய்யாதவர் யார் என்பதைத் தனது உள்ளுணர்வு சொல்லிவிடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போது கலிபோர்னியா சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஸ்காட் பீட்டர்சன், தனது தண்டனையை எதிர்த்து பலமுறை மேல்முறையீடு செய்தும், நீதிமன்றங்கள் தீர்ப்பை மாற்ற மறுத்துவிட்டன. இந்தச் சூழலில், வெளியாகவிருக்கும் இந்த புதிய ஆவணப்படம், அமெரிக்க நீதித்துறையின் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, பொது வெளியில் ஒரு புதிய விவாதத்தை நிச்சயம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

