Last Updated:
இத்தாலி மற்றும் பிரேசிலுக்குப் பிறகு உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் மூன்றாவது நாடாக மாற அர்ஜென்டினா தீவிரமாக முயன்று வருகிறது.
உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரில் அர்ஜெண்டினா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
காலிறுதியில் சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான கூடுதல் நேரத்தில் ஜூலியன் ஆல்வராஸ் மற்றும் மார்ட்டினெஸ் அடுத்தடுத்து அடித்த கோலால் த்ரில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
மேலும், உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக அசிஸ்ட் செய்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார் அர்ஜெண்டின கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்ஸி.
போட்டியின் 10-வது நிமிடத்திலேயே, நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி கொடுத்த கிராஸ் பந்தை, அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் மிக அழகாக ஹெடர் செய்து அர்ஜென்டினாவிற்கு முதல் கோலை அடித்தார். எனினும், ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணியின் டான் ண்டோயே ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் பிரீல் எம்போலோ டைவ் அடித்ததாக கூறி நடுவர் அவருக்கு இரண்டாவது மஞ்சள் அட்டை வழங்கி வெளியேற்றினார். இந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய VAR விதியின்படி, தவறான அடையாளக் காரணங்களுக்காக இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு, எம்போலோ சிவப்பு அட்டை பெற்று மைதானத்தை விட்டு வெளியேறினார். 10 வீரர்களுடன் சுவிட்சர்லாந்து போராடியதால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
கூடுதல் நேரத்தின் 112-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின் ஜூலியன் ஆல்வாரெஸ் அடித்த மின்னல் வேக கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்வதாக அமைந்தது.
ஆட்டத்தின் கடைசி வினாடிகளில் சுவிட்சர்லாந்து அணி வீரர்கள் அனைவரும் கோல் அடிக்க முன்னேறியதால் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி, தியாகோ அல்மாடா மற்றும் லௌடாரோ மார்டினெஸ் இணந்து ஒரு அபாரமான கவுண்டர் அட்டாக் மூலம் அர்ஜென்டினாவின் 3-வது கோலை அடித்தனர்.
39 வயதான லியோனல் மெஸ்ஸி இந்தத் தொடரில் 6 போட்டிகளில் 8 கோல்கள் அடித்து அசாத்திய ஃபார்மில் உள்ளார். கேப் வெர்டே மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு எதிராக கூடுதல் நேரம் வரை விளையாடி அர்ஜென்டினா களைப்படைந்திருந்தாலும், சனிக்கிழமை நடைபெற்ற மற்றொரு போட்டியில் நார்வேயை கூடுதல் நேரத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் செவ்வாய்க்கிழமை மோதவுள்ளன. இத்தாலி மற்றும் பிரேசிலுக்குப் பிறகு உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் மூன்றாவது நாடாக மாற அர்ஜென்டினா தீவிரமாக முயன்று வருகிறது.
Jul 12, 2026 11:30 AM IST


