Last Updated:
மகாராஷ்டிராவின் சதாராவில் உணவு பாதுகாப்புத்துறை சோதனைக்கு வருவதாக பரவிய வதந்தியையொட்டி நூற்றுக்கணக்கான லிட்டர் பாலை பொதுமக்களின் கண்முன்னே வியாபாரிகள் கொட்டிய காட்சி அதிரவைத்துள்ளது.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரிகள் சோதனை நடத்த வருவதாக பரவிய ஒரு சிறிய வதந்தியால், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள மான் தாலுகாவில் (Maan taluka) பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து, பால் சேகரிப்பாளர்கள் நூற்றுக்கணக்கான லிட்டர் பாலை பொதுமக்களின் கண்முன்னே ரோட்டில் கொட்டி அழித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் துகாராம் முண்டே உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் கலப்பட பாலுக்கு எதிராக மிக கடுமையான சோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சதாராவின் மான் தாலுகா பகுதிக்கு FDA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்த வருவதாக பால் வியாபாரிகளிடையே காட்டுத்தீ போல் ஒரு வதந்தி பரவியது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் பால் சேகரிப்பாளர்கள், சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க தாங்கள் சேகரித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் பாலை அவசர அவசரமாக சாலைகளில் ஊற்றி அழித்தனர்.
பால் சேகரிப்பாளர்கள் சாலையோரம் உள்ள சாக்கடைகளிலும், தார் ரோட்டிலும் போட்டிப்போட்டுக் கொண்டு பாலை கொட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.
साताऱ्यात शेतकऱ्याने रस्त्यावर ओतले शेकडो लिटर दूध; सोशल मीडियावर व्हिडिओ व्हायरल pic.twitter.com/HJpw5Cw7JI
— News18 Marathi (@News18_marathi) July 11, 2026
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பால் சுத்தமானதாக இருந்தால் அதிகாரிகள் சோதனைக்கு ஏன் பயப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ள பொதுமக்கள், இப்பகுதியில் பாலில் ரசாயனங்கள் மற்றும் தண்ணீர் கலப்படம் செய்வது பரவலாக நடப்பதையே இந்த சம்பவம் உறுதிப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு வதந்திக்கே இவ்வளவு பால் கொட்டப்பட்டுள்ளது என்றால், அப்பகுதியில் எந்த அளவிற்கு கலப்படம் நடந்திருக்கும் என்ற கோணத்தில் அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வதந்தியை நம்பி பாலை கொட்டிய நபர்கள் யார், அவர்கள் கலப்பட பாலில் ஈடுபட்டார்களா என்பது குறித்து FDA அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Jul 12, 2026 11:04 AM IST


