முதல்ல ஈசிஆர்.. இப்போ கோயம்பேடு.. தலைமை செயலகத்தை மாற்ற விஜய் திட்டம்போடுவது ஏன்?
விஜய் முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து தலைமை செயலகம் தொடர்பான விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது, முதலில் விஜயின் நீலாங்கரை வீட்டில் இருந்து தலைமை செயலகம் வருவதற்கு பயண நேரம், சாலை போக்குவரத்து கட்டுப்பாடு என பல விஷயங்கள் பேசுப்பொருளாக இருந்தது.
இந்த நிலையில் முதல்வர் விஜய் தலைமை செயலகத்திற்கு அருகில் போயஸ் கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறுவார் என பேச்சுக்களும் அடிப்பட்டது. இந்த நிலையில் தான் தலைமை செயலகத்தையே இடம் மாற்ற செய்யலாம் என்ற நிலைப்பாடு உருவானது.

இதன் முதல் கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) தற்போது கட்டப்பட்டு வரும் கலைஞர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தலைமை செயலகத்தை மாற்றலாம் என்ற தகவல் வெளியானது. சுமார் 535 கோடி ரூபாய் செலவிலும், 5000 பேர் அமரக்கூடிய இடமாக இருக்கும் காரணத்தால் இது மிகவும் சரியான தேர்வாக இருக்கும் என கூறப்பட்டது.
இதை தவெக அமைச்சர்கள் திட்டவட்டமாக மறுத்த நிலையில், தற்போது தலைமை செயலகம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் இயங்கி வந்த இடத்தில் மாற்றுவது குறித்து ஆரம்பக்கட்ட ஆலோசனை நடத்து வருகிறது. விஜய் தலைமையிலான தவெக அரசு தலைமை செயலகத்தை தொடர்ந்து மாற்ற திட்டமிடுவது ஏன்..?
2002ஆம் ஆண்டில் சுமார் 103 கோடி ரூபாய் முதலீட்டில் 36 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பேருந்து நிலையமாக உருவாக்கப்பட்ட கோயம்பேடு பஸ் நிலையம் தற்போது கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
திமுக ஆட்சியில் பழைய பேருந்து நிலையம் இருந்த கோயம்பேடு பகுதியில் மாபெரும் வணிக வளாகம் மற்றும் முக்கிய வர்த்தக பகுதியாக மாற்ற CMDA திட்டமிட்டு வந்தது.
தற்போது தவெக அரசு இங்கு புதிய தலைமை செயலக கட்டிடம் அமைக்கப்பதற்காக திட்டமிட்டு ஆரம்பக்கட்ட ஆலோசனைகளை செய்து வருகிறது. சரி, எதற்காக தலைமை செயலகத்தை மாற்றும் நோக்கில் தொடர்ந்து தவெக அரசு செயல்பட்டு வருகிறது..? தற்போதைய தலைமை செயலக கட்டிடத்தில் என்ன பிரச்சனை?
தற்போது தலைமை செயலகத்தில் இருக்கும் முக்கியமான பிரச்சனை இடநெருக்கடி தான், அதிகாரிகள், அலுவலர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லை. இதை தாண்டி போக்குவரத்து நெரிசல் காரணமாக முதல்வர் முதல் அனைத்து தலைமை செயலக அதிகாரிகளுக்கும் தொடர்ந்து காலதாமதமாகி வருகிறது.
இதனால் சென்னையின் மைய பகுதியாக இருக்கும் கோயம்பேடு பழைய பஸ் நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் புதிய தலைமை செயலகம் கட்டலாம் என சில ஐஏஎஸ் அதிகாரிகள் கூறியதையடுத்து, முதல்வர் முதல்கட்ட ஆலோசனை ஏற்று ஆரம்பக்கட்ட ஆலோசனை பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெரும்பாலான தலைமை செயலக அதிகாரிகள் கோயம்பேடு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் காரணத்தால் அதிகாரிகள் வந்து செல்ல அது ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

