( ரெ.மாலினி)
மலாக்காவில் செயல்பட்டு வந்த ரோஹின்யா கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து, சுமார் 2 லச்சம் ரிங்கேட் மதிப்பிலான திருடப்பட்ட அலுமினிய ஃபார்ம்வொர்க் (Aluminium Formwork) பொருட்களை மீட்டுள்ளனர்.
மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார் கூறுகையில், ஜூன் 15ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் சுங்கை ஊடாங் பகுதியில் உள்ள கட்டுமானப் பொருட்கள் சேமிப்பு கிடங்கில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.
அக்கும்பல், அங்கு இருந்த பாதுகாப்பு காவலரின் கைகள் மற்றும் கால்களை கட்டிப்போட்டு, கிடங்கில் இருந்த அலுமினிய ஃபார்ம்வொர்க் பொருட்களைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக அவர் தெரிவித்தார்.
போலீசார் மேற்கொண்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் ” ஒப்ஸ் கார்கோ ” நடவடிக்கையின் மூலம் ஜூன் 19ஆம் தேதி சிலாங்கூரின் காஜாங் பகுதியில் 18 முதல் 38 வயதுக்குட்பட்ட ஆறு ரோஹின்யா ஆண்களை கைது செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது இரண்டு லாரிகள், திருடப்பட்ட அலுமினியத்திலிருந்து தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் மூன்று மூட்டைகள் அலுமினிய கட்டிகள் மற்றும் 101,816 ரிங்கேட் மற்றும் 27,440 ரிங்கேட் மதிப்புள்ள இரண்டு பழைய உலோக விற்பனை ரசீதுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் ஏற்பட்ட மொத்த இழப்பு 2 லச்சம் ரிங்கேட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதுச் செய்யப்பட்ட ஆறு பேரும் ஜூலை 9ஆம் தேதி ஆயர் குரி மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் பிரிவு 395 கீழ் (கூட்டுக் கொள்ளை) குற்றஞ்சாட்டப்படவுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம்.
வன்முறை மற்றும் சொத்துக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மலாக்கா போலீஸ் தலைவர் தெரிவித்தார்.



