
காலாவதியான சீனியைப் பதுக்கி வைத்து, மீளப் பொதியிட்டு சந்தைக்கு விநியோகித்த பாரிய களஞ்சியசாலையொன்று பியகொட பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த நுகர்வுக்குப் பொருத்தமற்ற காலாவதியான சீனித் தொகையுடன் அதன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, காலாவதியான சீனியை புதிய பொதிகளில் இட்டு, காலாவதியாகும் திகதி மற்றும் வர்த்தக நாமத்தை மாற்றி சந்தைக்கு அனுப்பத் தயாராக வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், நிறம் மாறிய மற்றும் காலாவதியான சீனித் தொகையை சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சுவதற்காக விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

