Tamilnadu
oi-Vishnupriya R
நெல்லை: நெல்லை கல்லிடைக்குறிச்சி அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 பேரை வீரவநல்லூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த சித்திரபுத்திரன் (70). இவரது மகன் காளிமுத்து (40). விவசாயியான காளிமுத்து, கடந்த 2 ஆம் தேதி மாலை தனது மகன்கள் சின்னத்துரை (15), ஜெயராஜ் (5) ஆகியோருடன் பைக்கில் ரெட்டியார்புரத்தில் இருந்து மூலச்சிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்களை கார், 3 பைக்குகளில் மர்மநபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அப்போது மாதுடையார்குளம் அருகே சென்ற போது காளிமுத்துவின் பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய காளிமுத்துவை அந்த கும்பல் அரிவாளால் வெட்டி அவரது தலையை துண்டித்து படுகொலை செய்தது. மேலும் காளிமுத்துவின் மூத்த மகன் சின்னத்துரையின் காலில் அரிவாளால் வெட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
மேலும் காளிமுத்துவின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துச் சென்ற அந்த கும்பல் கல்லிடைக்குறிச்சி அருகே கரம்பை சாலையில் வீசியது. இந்த இரட்டைக் கொலை குறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 2006 ஆம் ஆண்டு தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பகையாக மாறியதாம். இதுவரை 7 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதும் , தற்போது எதிர்தரப்பினர் பழிக்குப் பழியாக காரை மோதவிட்டு தந்தை- மகனை கொடூரமாக கொலை செய்த தகவல் கிடைத்தது.
கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீஸார் 9 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர். இது தொடர்பாக மூலச்சி பகுதியைச் சேர்ந்த சிவகுருநாதன் மகன்கள் மகேஷ், மணிகண்டன், கிருஷ்ணன், பெருமாள்பாண்டியன் மகன்கள் அருள், மணி, பட்டுராஜா, ராசையா மகன்கள் சுபாஷ், மகேந்திரன், வெள்ளப்பாண்டி மகன் தங்கதுரை, கிருஷ்ணன் மகன் கந்தன், மூக்காண்டி மகன் ராஜதுரை ஆகிய 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மகேஷ், குமார், முத்துச்செல்வன் ஆகிய 3 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போன் டவரை வைத்து தலைமறைவான இவர்களை கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். முத்துப்பட்டன், மணிகண்டன், மகாலிங்கம், கிருஷ்ணன் ஆகிய 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
2006 ஆம் ஆண்டு நடந்த தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினையால் இதுவரை 9 பேர் வரை கொலை செய்யப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு வரை 7 பேரை கொலை செய்திருந்த நிலையில் போலீஸார் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் 16 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

