டிகே சிவகுமார் ஆட்சியின் முதல் 30 நாட்கள்.. அறிவிப்புகள் பலே.. ஆனா ஒரு பிரச்சனை!
கர்நாடக முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள டிகே சிவகுமார், தனது ஆட்சியின் முதல் 30 நாட்களிலேயே வேகமான முடிவுகள், மக்கள் நல அறிவிப்புகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். ஆனால், இந்த அதிரடி அறிவிப்புகள் கிரவுண்ட் லெவலில் முழுமையாக செயல்படுமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

மக்கள் நல அறிவிப்புகளுக்கு முன்னுரிமை
பொறுப்பேற்ற உடனேயே மாணவர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண வசதி, B-Khata சொத்துகளை A-Khata ஆக மாற்றும் நடைமுறை, கட்டாய குடியிருப்பு சான்றிதழ் (Occupancy Certificate) விதிவிலக்கு, இளைஞர் கிளப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டது.
பெங்களூருவில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.2,000 கோடி மதிப்பிலான திட்டமும் அறிவிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் குறைகளை நேரடியாக தீர்க்க ‘பிரஜா சேவா’ துறை உருவாக்கப்பட்டதுடன், ஊழல் புகார்களுக்கான சிறப்பு உதவி எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டது.
சட்டம்-ஒழுங்கு, அரசு பணியிடங்கள் மீது கவனம்
மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு ரவுடி ஒழிப்பு படையை அமைக்க உத்தரவிடப்பட்டது. அதேபோல், காலியாக உள்ள 72,000 அரசு பணியிடங்களை ஆறு மாதங்களுக்குள் நிரப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிர்வாகத்தை வேகப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன.
மத்திய அரசுடன் மோதலை தவிர்க்கும் அணுகுமுறை
முன்னாள் ஆட்சியுடன் ஒப்பிடும்போது, மத்திய அரசுடன் நேரடி மோதலைத் தவிர்க்கும் அணுகுமுறையை டிகே சிவகுமார் பின்பற்றியுள்ளார். மாநிலத்தின் நீர்ப்பாசன திட்டங்கள், மெட்ரோ விரிவாக்கம், போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
அறிவிப்புகளுக்கும் செயல்பாட்டுக்கும் இடையே இடைவெளி?
ஆனால், ஆட்சியின் முதல் மாதத்திலேயே சில சவால்களும் வெளிப்பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் கல்வி போன்ற முக்கிய துறைகளுக்கு முழுநேர அமைச்சர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், அந்த பொறுப்புகள் முதல்வரிடமே உள்ளன. மாநிலத்தின் பல மாவட்டங்களில் வறட்சி போன்ற சூழல் உருவாகியுள்ளதால், அணைநீரை நம்பிய பயிர்ச் சாகுபடியை விவசாயிகள் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
‘பெங்களூரு மைய’ ஆட்சி என்ற விமர்சனம்
முதல்வர் தொடர்ந்து பெங்களூருவில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், பல அமைச்சர்கள் மாவட்ட அளவில் களப்பணிகளில் தீவிரமாக செயல்படவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், அரசு பெங்களூருவை மட்டுமே மையமாகக் கொண்ட நிர்வாகமாகப் பார்க்கப்படும் அபாயம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் எச்சரிக்கின்றனர்.
முதல் மாதம் நம்பிக்கையா… சவாலா?
முதல்வராக டிகே சிவகுமார் தொடங்கிய முதல் மாதம், அதிரடி அறிவிப்புகள் மற்றும் விரைவான முடிவுகளால் கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், அந்த அறிவிப்புகள் திட்டமிட்டபடி நடைமுறைக்கு வருமா, மாநிலம் முழுவதும் அதன் பலன் சென்றடையுமா என்பதே அடுத்த கட்டத்தில் அவரது ஆட்சியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கும்.

