Last Updated:
பிரதமர் மோடி ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்தார்.
ராஜாஸ்தான் மாநிலம், ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது ராஜஸ்தானின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவீன உள்கட்டமைப்பு மற்றும் பாரம்பரிய ராஜஸ்தானிய கலாச்சாரப் பின்னணியை ஒன்றிணைத்து ரூ. 480 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முனையக் கட்டிடம், 23,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. மேலும், பயணிகளுக்குத் தடையற்ற மற்றும் வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் நவீன வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த முனையத்தின் மூலம், ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் வகையில் ஜோத்பூர் விமான நிலையம் மேம்பாடு அடைந்துள்ளது.
முன்னதாக ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், “ஜூலை 4-ஆம் தேதி, ஜோத்பூர் மக்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையவுள்ளது. ஜோத்பூர் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தியச் சுற்றுலாவைப் பொறுத்தவரை ஜோத்பூர் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது,” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், அடுத்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் பிராந்திய விமானப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில், திருத்தப்பட்ட ‘உடான்’ (UDAN) திட்டத்தை பிரதமர் மோடி ஜோத்பூரில் தொடங்கி வைத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 28,840 கோடி ஒதுக்கீட்டுடன் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டம், விரிவான மற்றும் நிலையான இணைப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
நாடு முழுவதும் விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில், தற்போது பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளங்களை 100 விமான நிலையங்களாக மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிராந்திய விமான நிலையங்களின் செயல்பாட்டுத் திறனை உறுதி செய்வதற்கான பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகளுக்காக (O&M) ரூ. 2,500 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 200 நவீன ஹெலிபேடுகளை (ஹெலிகாப்டர் இறங்குதளங்கள்) உருவாக்கவும் இத்திட்டம் முன்மொழிகிறது.
23,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஜோத்பூர் விமானநிலையத்தின் புதிய முனையம்! – திறந்துவைத்த பிரதமர் மோடி


