விடிய விடிய அடித்த ரஷ்யா.. கதறும் உக்ரைன்.. ஈரான் போர் முடிந்த அடுத்த கணமே இப்படியா?
ரஷ்யா படைகள், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ் மீது நேற்று இரவு அதிரடியான தாக்குதலை நடத்தியது மூலம், இப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஒருப்பக்கம் அமெரிக்க – ஈரான் மத்தியிலான போர் பதற்றம் குறைந்து வர்த்தகமும், முதலீட்டு சந்தையும் இயல்பு நிலைக்கு திரும்பும் வேளையில், மறுபுறம் ரஷ்யா – உக்ரைன் மத்தியில் மீண்டும் போர் தாக்குதல் துவங்கியுள்ளது.
புதன்கிழமை இரவு துவங்கிய வியாழக்கிழமை வரையில் ரஷ்ய படைகள் கீவ் நகரின் பல்வேறு இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் சுமார் 8 பேர் மரணம் அடைந்தனர், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இரவு முழுவதும் நடந்த இந்த தாக்குதலில் ரஷ்ய படைகள் பலேஸ்டிக் ஏவுகணை, க்ரூஸ் ஏவுகணை, டிரோன் தாக்குதல் என பல வகையில் தாக்கியதில் கட்டிடம் இடிந்து விழுந்தது தரைமட்டமானது.

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கீவ் நகர மக்கள் இரவோடு இரவாக மெட்ரோ ஸ்டேஷனில் தஞ்சம் புகுந்தனர். ரஷ்ய படைகள் சுமார் 28 இடங்களை டார்கெட் செய்து இத்தாக்குதலை நடத்தியுள்ளதாக கீவ் நகரின் ராணுவ நிர்வாக தலைவர் தைமூர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக உக்ரைன் – ரஷ்யா மத்தியிலான தாக்குதல் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் உக்ரைன் நாட்டின் நீண்ட தூரம் சென்று தாக்கும் டிரோன் மூலம் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவின் ராணுவ தளங்கள் மற்றும் எரிவாயு தளம் மீது தாக்கியது. இதனால் ரஷ்யாவின் சில பகுதிகள் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய தாக்குதல் பார்க்கப்படுகிறது.
இதே நேரத்தில் உலகின் மறுமுனையில் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடந்த பேச்சுவார்த்தையில் சாதகமாக மற்றும் சிறப்பான முன்னேற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் இதை உறுதிப்படுத்தினார்.
ஈரான் – அமெரிக்கா மத்தியில் சுமுகமான நிலை தொடர்ந்தால் ஜூன் 17ஆம் தேதி வரை திட்டமிட்டப்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
மேலும் இஸ்ரேல் தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் வாய்ப்பு தொடர்ந்து குறையவும் வாய்ப்புள்ளது.

