Last Updated:
எந்தக் கட்டத்திலும் E20 திட்டம் ஒரு சோதனை என மத்திய அரசு கூறவில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனையில் மட்டுமே இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அரசு கூறியதாக வெளியான தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் வாகனங்கள் பாதிக்கப்படும் எனவும் மைலேஜும் கணிசமாக குறையும் என்றும் வாகன ஓட்டிகள் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் எத்தனால் கலப்பு திட்டம் பரிசோதனை முயற்சியே என மத்திய அரசு கூறியதாக தகவல்கள் பரவின.
இந்நிலையில் இதனை திட்டவட்டமாக மறுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வழக்கு விசாரணை, பெட்ரோலில் எத்தனால் கலக்கும் திட்டம் குறித்தது அல்ல எனவும், எத்தனால் உற்பத்தி ஆலைகளுக்கு எத்தனால் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வழக்கே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் எந்தக் கட்டத்திலும், E20 திட்டம் ஒரு சோதனை என மத்திய அரசு கூறவில்லை எனவும் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.


