மனிதர்களுக்கு பதில் AI-கிட்ட வேலை வாங்குறது யானையை கட்டி தீனி போடுற மாதிரி!! முடியல!! – புலம்பும் நிறுவனங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களை விட திறமையாகவும் வேகமாகவும் வேலைகளை முடிக்கிறது எனவே இனி மனிதர்களே வேண்டாம் என கூறி டெக் நிறுவனங்கள் லட்சக்கணக்கானவர்களை வேலையைவிட்டு நீக்கியுள்ளன. ஆனால் இது எவ்வளவு பெரிய தவறு என்பதை படிப்படியாக உணர தொடங்கியுள்ளன.
மனிதர்களை வேலைக்கு அமர்த்தினால் சம்பளம், அலோவென்ஸ், பங்குகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் அந்த காசை மிச்சப்படுத்த ஏஐ பயன்படுத்தலாம் என பல டெக் நிறுவனங்களும் ஏஐ ஏஜெண்டுகளை பணியில் அமர்த்தி வருகின்றன. ஊழியர்களை விட ஏஐ மலிவானது என்பதால் நம் லாபம் அதிகரிக்கும் என்பது நிறுவனங்களின் கருத்து. ஆனால் என்விடியா (Nvidia) நிறுவனத்தின் துணை தலைவர் பிரையான் கேட்டசரோ ஏஐ வைத்து வேலை வாங்குவது யானை கட்டி தீனி போடுவதற்கு சமம் என கூறியுள்ளார்.

என்விடியா நிறுவனத்தின் ‘அப்ளைடு டீப் லேர்னிங்’ பிரிவின் தலைவராக இருக்கும் பிரையன் கேட்டன்சரோ , ஏஐ இயக்குவதற்கான கணினிச் செலவுகள் (Compute Costs), அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை விட மிக அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.ஏஐ மாடல்களுக்கு பயிற்சி தருவது, சோதனை செய்வது இயக்குவது மற்றும் அதிநவீன ஜிபியுக்கள், அதற்கான டேட்டா மையங்கள் அதற்கு தேவைப்படும் மின்சாரம், தண்ணீர் என இந்த உள்கட்டமைப்பு செலவுகள் மிக அதிகமாக உள்ளன என கூறியுள்ளார்.

பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் ஏஐ மாடல்களுக்கு ஒரு குறிப்பிட்ட டோக்கன் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. ஒரு பெரிய நிறுவனத்தில் AI கருவிகளை பெரிய அளவில் பயன்படுத்தும்போது, இந்த டோக்கன் கட்டணங்கள் கணிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து, மனித ஊழியர்களின் மாதச் சம்பளத்தை விட அதிகமாகிவிடுகின்றன என கூறுகிறார்.
ஏஐ தொழில்நுட்பம் தானாகவே அனைத்தையும் செய்துவிடாது. அது உருவாக்கும் முடிவுகளை சரிபார்க்கவும், பிழைகளை திருத்தவும், தொழில்நுட்பத்தை நிர்வகிக்கவும் மனிதர்களின் பங்கு அத்தியாவசியமாக உள்ளது. எனவே ஏஐ-க்கும் செலவு செய்ய வேண்டும் கண்காணிக்க்கும் ஊழியருக்கும் சம்பளம் தர வேண்டும் இது கூடுதல் செலவை உருவாக்குகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக 2024-ஆம் ஆண்டு எம்.ஐ.டி நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் Visual tasks பணிகளில் வெறும் 23% மட்டுமே ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக லாபகரமாக உள்ளது. மீதமுள்ள 77% பணிகளுக்கு மனிதர்களே மிகவும் சிக்கனமான தேர்வாக இருக்கிறார்கள் என தெரிய வந்தது. அதாவது மனிதர்களை கொண்டு அந்த பணிகளை முடிப்பது தான் நிறுவனத்திற்கு லாபம் என தெரிவித்தது.
ஏஐ தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்கிறது என்று தெரிந்தும், ஏன் பெரிய நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன என்ற கேள்வி எழுகிறது. பெரிய டெக் நிறுவனங்கள் ஏஐ சம்பந்தபப்ட்ட மூலதன செலவினங்களுக்காக மட்டும் இந்த ஆண்டு 740 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளன. முந்தைய ஆண்டை விட இது 59% அதிகம் என தெரியவந்துள்ளது. டெக் நிறுவனங்களுக்கு இது ஒரு எதிர்கால முதலீடு என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இன்றைய செலவு அதிகமாக இருந்தாலும், தொழில்நுட்பம் வளர வளர அதன் செலவுகள் குறையும் என்ற எதிர்பார்ப்பு ஒரு காரணம். இந்த உள்கட்டமைப்பை இப்போதே உருவாக்கி வைத்துக்கொள்வது, வரும் பத்தாண்டுகளில் சந்தையில் முன்னிலை பெற உதவும் என நிறுவனங்கள் நம்புவதால் ஏஐ தொழில்நுட்பத்தில் பணத்தை வாரி இறைக்கின்றன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இனி வரும் நாட்களில் ஏஐ மனித தலையீடுகள் இல்லாமல் திறமையாக செயல்பட்டு செலவுகளை குறைக்கவில்லை என்றால் மீண்டும் டெக் நிறுவனங்கள் மனிதர்கள் நோக்கி திரும்பி வருவதற்கு வாய்ப்புள்ளது.

