Last Updated:
ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதிடக் கூடாது என்று அயோத்தி நகர வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், ’சொர்க்கம் இடிந்து விழுந்து விடாது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கோடிக்கணக்கான ரூபாயை கையாடல் செய்ததாக எழுந்த புகார் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி எம்.எம்.சுந்தரேசன், ஷீல் நாகு அமர்வில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உத்தரபிரதேச காவல்துறை நடத்தி வரும் விசாரணை நம்பிக்கையளிக்கவில்லை என்றும், சிசிடிவி உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை என்றும் முறையிட்டார். இந்த வழக்கை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் சொர்க்கம் ஒன்றும் உடைந்து விழுந்துவிடாது என்று கருத்து தெரிவித்தனர். கோடை விடுமுறை முடிந்த பிறகு அடுத்த மாதம் 12 முதல் 17ஆம் தேதிக்குள் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ராமர் கோயில் நிதி கையாடல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதிடக் கூடாது என்று அயோத்தி நகர வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை மீறி நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் காலிகா பிரசாத் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
Chennai,Tamil Nadu


