Last Updated:
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து இதுகுறித்து பைகுல்லா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்
மும்பையில் மொஹரம் தொழுகையில் பங்கேற்றவர்களை விஷ மாத்திரை கொடுத்து கொல்ல முயன்ற நபரை காவலர்கள் கைது செய்தனர். மும்பையில் மொஹரத்தையொட்டி நடந்த தொழுகை நிகழ்வுகளில் பங்கேற்றவர்களுக்கு ஒருவர் வலி நிவாரணி என்று கூறி மாத்திரை வழங்கியதாகத் தெரிகிறது.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து இதுகுறித்து பைகுல்லா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த மாத்திரையை உட்கொண்ட நபருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக காவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி மாத்திரை வழங்கிய பிரேம்ஜி என்ற நபரை பிடித்தனர்.
விசாரணையில், எலிக்கொல்லி மருந்துகளில் உள்ள Zinc phosphide-ஐ நிரப்பிய சுமார் 15 ஆயிரம் மாத்திரைகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இதனைக் கொடுத்து பலரை கொல்ல முயற்சி செய்ததாக அந்த நபர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெயிண்ட் கடை நடத்தி வந்த அவர், பெயிண்ட்டில் கலப்பதற்காக என்று கூறி இந்த ரசாயனங்களை வாங்கி மாத்திரைகளை தயாரித்தது தெரியவந்தது. அந்த நபர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில், அதன் பின்னணி குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


