இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டில் சீனா தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளது.
வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக சீனா சென்றிருந்தபோது, அரசு நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு மிக அருகில், வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மோங்லா துறைமுகத்தின் அருகே பொருளாதார மண்டலத்தை சீனா மேம்படுத்தவுள்ளது.
முன்னதாக, முந்தைய ஷேக் ஹசீனா ஆட்சிக்காலத்தில் இந்த 110 ஏக்கர் நிலம் இந்தியப் பொருளாதார மண்டலத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்தியாவின் ஹிரானந்தானி குழுமமும் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, “இந்திய நிறுவனம் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளைத் தொடங்கவில்லை” எனக் கூறி இந்தத் திட்டத்தை ரத்து செய்தது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

