Last Updated:
அமேசானின் இந்த முதலீடு, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மீது அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
பிரபல வர்த்தக நிறுவனமான அமேசான், இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2026 முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 48 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கும் மேல்) முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அமேசானின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “பிரதமர் மோடி பதவியேற்றபின், அதாவது கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மிகப்பெரியது. பிரதமர் மோடி காட்டிய தொலைநோக்குப் பார்வை மிகவும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன. அது இந்திய நாட்டின் வளர்ச்சியிலும், உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்திலும் தெளிவாகத் தெரிகிறது” என்றார்.

அமேசான் நிறுவனமும், “AI மற்றும் கிளவுட் கம்யூட்டிங்கில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இதை அறிந்து, எங்களின் சமீபத்திய முதலீட்டில் கூடுதலாக 13 பில்லியன் டாலரை, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்குகிறோம். இதன் மூலம் 2026-2030-க்கு இடையில் இந்தியாவில் எங்களின் முதலீட்டுத் திட்டம் 35 பில்லியன் டாலரிலிருந்து 48 பில்லியன் டாலராக உயரும்” என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமேசானின் இந்த முதலீடுகளின் மூலம், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்காக அமேசான் செய்யும் மொத்த செலவு, 2030-ஆம் ஆண்டுக்குள் 21 பில்லியன் டாலரைத் தாண்டும்.
Really enjoyed my meeting with Prime Minister @narendramodi about what’s ahead for Amazon in India.
We’ve been serving customers, sellers, developers, startups, and enterprises in India for more than a decade and just getting started.
Shared that we’re investing $48 billion… pic.twitter.com/CSiwPTiEBh
— Andy Jassy (@ajassy) June 25, 2026
முதலீடுகளுடன், அமேசான் சில நீண்ட கால இலக்குகளையும் அறிவித்துள்ளது. அதன்படி 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 38 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை ஆதரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024-ல் இந்த எண்ணிக்கை 28 லட்சமாக இருந்தது. இந்த புதிய முதலீட்டின் பெரும் பகுதி அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்திற்காகப் பயன்படுத்தப்படும். குறிப்பாக மும்பை மற்றும் ஹைதராபாத்தில் தரவு மையங்களின் திறனை விரிவுபடுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி தனது ‘X’ பக்கத்தில் ஆண்டி ஜாஸ்ஸி, “இந்தியாவில் அமேசானின் எதிர்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடனான எனது சந்திப்பு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் (அமேசான்) ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்தியாவில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், டெவலப்பர்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு சேவை செய்து வருகிறோம். எங்கள் பயணத்தில் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பில் $21 பில்லியனுக்கும் அதிகமான தொகை உட்பட, $48 பில்லியன் முதலீடு செய்ய உள்ளோம். இதுபற்றி பிரதமர் மோடியிடம் பகிர்ந்து கொண்டேன். இத்துடன் 2030-க்குள், 3.8 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், $80 பில்லியன் மதிப்பிலான இ-காமர்ஸ் ஏற்றுமதியை செயல்படுத்தவும், மேலும் 15 மில்லியன் சிறு வணிகங்களுக்கு செயற்கை நுண்ணறிவின் பலன்களைக் கொண்டு சேர்க்கவும் நாங்கள் (அமேசான்) திட்டமிட்டுள்ளோம்” என்றுள்ளார்.
A great meeting with Mr. Andy Jassy. I welcome Amazon’s record $48 billion investment in India. This will create new opportunities for our youth. At the same time, it shows the growing interest across the world to invest in India!@amazon https://t.co/emr6Dd9Cps
— Narendra Modi (@narendramodi) June 25, 2026
பிரதமர் மோடியும் தன் எக்ஸ் தளத்தில், “ஆண்டி ஜாஸ்ஸியுடனான எனது சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இந்தியாவில் அமேசான் செய்துள்ள 48 பில்லியன் டாலர் முதலீட்டை நான் வரவேற்கிறேன். இது நமது இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அதே சமயம், இந்தியாவில் முதலீடு செய்வதில் உலகெங்கிலும் வளர்ந்து வரும் ஆர்வத்தையும் இது காட்டுகிறது” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம், 2010 முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் அமேசானின் மொத்த முதலீடுகள் 88 பில்லியன் டாலர்களைத் தாண்டும். இது இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் மீது அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ரூ. 4 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு… பிரதமர் மோடியை சந்தித்த பின் அமேசான் CEO அறிவிப்பு!


